பாமக இந்த முறை எந்த கட்சியோடு கூட்டணி அமைக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் பொதுக்குழு கூட்டத்திற்கு பின்னர் தான் அதிகாரபூர்வ பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நேற்றைய தினம் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் மக்களவைத் தேர்தலில் எந்த கூட்டணியில் இணையப் போகிறோம் என்பது கட்சியின் முக்கியத் தலைவர்கள் சொல்லாமல் சொல்லியுள்ளனர்.
பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து தான் 2014, 2019 என இரு மக்களவைத் தேர்தல்களை சந்தித்தது. இதில் 2014இல் தருமபுரியில் பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் மட்டும் வெற்றி பெற்றார். 2019 தேர்தலில் பாமவுக்கு எந்த இடமும் கிடைக்கவில்லை.
தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் ஜூலை மாதம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்டார் அன்புமணி ராமதாஸ். தமிழ்நாடு அளவில் கூட்டணியில் இல்லை என்றும் மத்தியில் மட்டும் கூட்டணியில் இருக்கிறோம் என்றும் அன்புமணி கூறினார்.
இதனால் அதிமுகவுடன் அல்லாமல் பாஜகவுடன் இணைய பாமக விரும்புகிறதோ என்ற சந்தேகங்கள் அப்போது எழுந்தன.இதற்கிடையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய நிலையில் பாமக பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் பாமகவோ நாங்கள் எந்த கூட்டணியிலும் இல்லை என்று கூறியது.
இந்த சூழலில் நேற்று நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸும், அன்புமணி ராமதாஸும் பேசியதில் இருந்து அதிமுகவுடன் கூட்டணி வைக்க விரும்புகிறார்கள் என்ற பேச்சு எழுந்துள்ளது.
பொதுக்குழுவில் மத்திய அரசின் பத்ம விருதுகள் குறித்து அன்புமணி பேசிய போது, “தமிழ்நாட்டுக்காகவும் இந்தியாவுக்காகவும் பல்வேறு சாதனைகளை செய்த 85 வயதிலும் நாட்டிற்காக உழைத்து வரும் நம் ஐயாவுக்கு ஏன் பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை. அந்த வருத்தம் எனக்கு உள்ளது. முதலமைச்சராக இருந்து சாதிப்பது பெரிதல்ல. பதவியில் இல்லாமலே 6 இட ஒதுக்கீடுகள் கொண்டு வரக் காரணமாக இருந்தவர் ஐயா..” என்று பேசினார்.
அன்புமணி மத்திய அரசு குறித்து அதிருப்தி தெரிவித்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசும் போது, “பாரத ரத்னா விருது கொடுத்தாலும் நான் வாங்கப்போவதில்லை” என்று பேசினார்.
இதனால் இரு தலைவர்களும் பாஜக பக்கம் நகர்வதில் விருப்பம் கொள்ளவில்லை என்பது தெளிவாவதாக சொல்கிறார்கள் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள். அதுமட்டுமல்லாமல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முன்வராத திமுக அரசையும் விமர்சித்து அன்புமணி பேசினார்.
பாஜக திமுகவை விமர்சித்தவர்கள் அதிமுக குறித்து எதிர்மறையாக எதையும் பேசவில்லை. எனவே பாமக இம்முறை அதிமுக பக்கமே நகரும் என்று கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இன்னும் சில தினங்களில் பாமகவில் மக்களவை பாதை எந்த திசையில் இருக்கும் என்பது துல்லியமாக தெரிந்துவிடும்.
+ There are no comments
Add yours