பாரம்பரிய முறைப்படி மட்டுமே தண்ணீர் பீய்ச்சி அடிக்க வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு!

Spread the love

மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் மீது பாரம்பரிய முறைப்படி மட்டுமே தண்ணீர் பீய்ச்சி அடிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

உலக பிரசித்திப் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா வரும் 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 23ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 23 ஆம் தேதி நடக்க உள்ளது. பாரம்பரியமாக ஆட்டுத்தோலை பயன்படுத்தி தோல் பைகளில் நறுமணநீர் நிரப்பி துருத்தி எனும் சிறிய குழாய் மூலம் தண்ணீரை கள்ளழகர் மீது பக்தர்கள் பீய்ச்சி அடிப்பது வழக்கம்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பக்தர்கள் ஐதீகத்தை மீறி தோல் பையில் அதிக விசையுள்ள பிரஷர் பம்புகளை பொருத்தி தண்ணீரில் திரவியங்கள் மற்றும் வேதிப்பொருள்களை கலந்து பீய்ச்சுவதால் கள்ளழகர் சுவாமி, தங்கக் குதிரை வாகனம் மற்றும் சுவாமியின் விலைமதிப்பற்ற ஆபரணங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் திரவியம் மற்றும் வேதிப்பொருள்கள் கலந்த தண்ணீரால் பட்டர்கள், பிரசாரகர், பணியாளர்கள் மற்றும் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களும் பாதிக்கப்படுகின்றனர்

இந்த ஆண்டு நடைபெறும் சித்திரைத் திருவிழாவில் தண்ணீர் பீய்ச்சும் பக்தர்கள் அதிக விசையுள்ள பிரஷர் பம்புகள் மூலம் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்க தடை விதிக்க வேண்டும் என்று மதுரையை சேர்ந்த நாகராஜன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

இருதரப்பு வாதங்கைளையும் கேட்ட நீதிபதி, தண்ணீர் தோல்பை வைத்து பீய்ச்சீ அடிப்பவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். பாரம்பரிய முறைப்படி மட்டுமே தண்ணீர் பீய்ச்சி அடிக்க வேண்டும். கள்ளழகர் மலையில் இருந்து வைகை ஆறு வரும் வரை இடையே எந்த இடத்திலும் தண்ணீர் பீய்ச்சி அடிக்க கூடாது. இதனை மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மதுரை மாநகர காவல் துறை ஆணையர் கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும். மேலும் பெண்கள்,குழந்தைகள்,முதியோர்கள் மீது தண்ணீர் பீச்சி அடிக்க தடை விதிப்பட்டுள்ளது” என்று உத்தரவிட்டார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours