புள்ளியியல் சார்ந்த பணியிடங்களை நிரப்ப விரைந்து கலந்தாய்வு நடத்த வேண்டும் – ராமதாஸ்!

Spread the love

தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள புள்ளியியல் சார்ந்த பணியிடங்களை நிரப்புவதற்கு விரைந்து கலந்தாய்வு நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் பல்வேறு நிலைகளில் காலியாக உள்ள ஒருங்கிணைந்த சார்நிலை புள்ளியியல் பணிகளை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகள் கடந்த 2023ம் ஆண்டில் நடத்தப்பட்டு ஆகஸ்ட் மாதம் முடிவுகள் வெளியிடப்பட்டது. இதே போல் புள்ளியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் ஆகஸ்ட் இறுதியில் வெளியிடப்பட்டது.

இந்த போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இதுவரை கலந்தாய்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில் இது தொடர்பாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”புள்ளியியல் பணிகளுக்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டு 16 மாதங்கள் ஆகியும் தேர்வு நடைமுறைகள் இன்னும் நிறைவடையவில்லை. இதற்கு காரணம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அலட்சியம் மட்டுமே. அரசு பணியில் சேர்ந்து விட வேண்டும் என்ற போட்டித் தேர்வுகளை எழுதியவர்கள், இப்போது வரை கலந்தாய்வு நடத்தப்படாததால் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “எனவே ஒருங்கிணைந்த சார்நிலை புள்ளியியல் தேர்வுக்கான கலந்தாய்வு அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உடனடியாக வெளியிட வேண்டும். அடுத்த ஒரு மாதத்திற்குள் கலந்தாய்வு நடத்தி வெற்றி பெற்ற அனைவருக்கும் சம்பந்தப்பட்ட அரசு துறைகள் மூலமாக பணிநியமான ஆணைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours