திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் திடீரென மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அடுத்த அரண்வாயில் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி (55). அங்குள்ள பீர் தொழிற்சாலை ஒன்றில் அவர் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் ரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரை நோய் காரணமாக அவதிப்பட்டு வந்த முனுசாமி, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் செவிலியர்கள் அவருடைய கை, கால்களை படுக்கையில் கட்டிப் போட்டு வைத்திருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் கட்டுகளை அவிழ்த்து கொண்ட முனுசாமி, திடீரென முதலாவது மாடியில் இருந்து ஆம்புலன்ஸ் நிறுத்தும் இடத்தில் குதித்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த முனுசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மருத்துவமனைக்கு விரைந்து வந்த காவல்துறையினர், முனுசாமியின் சடலத்தை வீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த முனுசாமிக்கு நாகபூஷணம் என்ற மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிகிச்சையில் இருந்த நோயாளி, திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு நிலவியது.
+ There are no comments
Add yours