வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சேறு சகதியை அகற்றும் பணியில் வெளி மாவட்டங்களிலிருந்து வந்த 600 தூய்மைப் பணியாளர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18ம்தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழையின் காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெருத்த சேதத்தை விளைவித்தது.
தூத்துக்குடி மாநகர பகுதியில் பெரும்பாலான குடியிருப்புகளில் வெள்ளம் படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் சேறும், சகதியும் படிந்து துர்நாற்றம் வீசுகிறது. இதையடுத்து முகாம்களில் தங்கியிருந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பிற மாவட்டங்களிலிருந்து வந்த தூய்மைப் பணியாளர்கள் 600 பேர் மாநகரில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களால் கழிக்கப்பட்ட பொருள்களை அகற்றி லாரிகளில் எடுத்துச் சென்றனர். மேலும் வெள்ளநீரால் தெருக்களில் படிந்த சேறால் வழுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதை அகற்றும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட நெல்லை – திருச்செந்தூர், நெல்லை – தூத்துக்குடி, திருச்செந்தூர் தூத்துக்குடி ஆகிய பிரதான சாலைகள் சீரமைக்கப்பட்டு கடந்த 2 நாட்களாக மாற்றுப்பாதைகளிலும், தற்காலிக பாதைகள் வழியாகவும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. சுற்று வட்டார பகுதிகளில் 250க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 நாட்களுக்கு பிறகு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் முகாமிட்டு மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாநகரில் டி. சவேரியார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் வடியாத நிலையில் ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் 112 இடங்களில் சாலைகளில் உடைப்பு ஏற்பட்டு அடித்து செல்லப்பட்ட நிலையில் 84 இடங்களில் சாலைகள் சீரமைக்கப்பட்டு போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது. ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள சாலைகள், பாலங்களை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. மாநகரில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டூ வீலர்கள் பழுதுபட்டுள்ளன. இந்த டூ வீலர்களை ஒர்க்ஷாப்களிலும், ஆங்காங்கே தெருக்களின் நடுவிலும் நிறுத்தி மெக்கானிக்குகள் பழுதுபார்த்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் நூற்றுக்கணக்கான இடங்களில் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது
+ There are no comments
Add yours