தென் மாவட்டங்களில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. பல்வேறு இடங்களில் ரயில் பாதைகள் நீரில் மூழ்கியுள்ளன.
இதையொட்டி சென்னை எழும்பூர் – திருநெல்வேலி வந்தேபாரத் ரயில்கள், எழும்பூர் – திருச்செந்தூர், திருநெல்வேலி – ஜாம்நகர், திருச்செந்தூர் – பாலக்காடு, திருச்சி – திருவனந்தபுரம், நாகர்கோவில் – கோவை, தாம்பரம் – ஈரோடு, வாஞ்சிமணியாச்சி – தூத்துக்குடி, திருநெல்வேலி – திருச்செந்தூர், திருநெல்வேலி – தூத்துக்குடி, நாகர்கோவில் – திருநெல்வேலி, ஈரோடு – ஜோலார்பேட்டை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் நேற்று ரத்து செய்யப்பட்டன.
கன்னியாகுமரி – எழும்பூர், நாகர்கோவில் – தாம்பரம், நாகர்கோவில் – எஸ்எம்விடி பெங்களூரு, திருநெல்வேலி – தாதர், திருச்செந்துார் – மைசூர், திருநெல்வேலி – எழும்பூர், துாத்துக்குடி – எழும்பூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் மதுரையில் இருந்து நேற்று இயக்கப்பட்டன. செங்கோட்டை – தாம்பரம் விரைவு ரயில் மாற்றுப்பாதையாக தென்காசி, ராஜபாளையம், விருதுநகர் வழியாக இயக்கப்பட்டன.
அதைத்தொடர்ந்து கோவை – நாகர்கோவில், ஜோலார்பேட்டை – ஈரோடு, ஈரோடு – திருச்சி ரயில்களின் இன்றைய சேவையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதற்கிடையே நேற்று தென்மாவட்டங்களுக்கு 60 அரசு விரைவு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பயணிகளின் வருகைக்கேற்ப குறைவான பேருந்துகளை இயக்க அரசு விரைவு போக்குவரத்து கழகம் முடிவு செய்திருப்பதாக மேலாண் இயக்குநர் தெரிவித்தார். அதேபோல சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் 350 ஆம்னி பேருந்துகளும் நேற்று ரத்து செய்யப்பட்டன.
+ There are no comments
Add yours