விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை: உருக்குலைந்த குன்னூர், கோத்தகிரி!

Spread the love

உதகை: நீலகிரி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக, கோத்தகிரி, குன்னூர் மலைப் பாதைகளில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய கனமழை, விடிய, விடிய பெய்தது. சாலைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. பல்வேறு பகுதிகளில் சாலையின் நடுவே மரங்கள் முறிந்து விழுந்தன.

வீடுகளில் புகுந்த தண்ணீர்: குன்னூரில் சில வீடுகளில் தண்ணீர் புகுந்தது. எம்ஜிஆர் நகரில் ஒரு வீடு இடிந்து விழுந்தது. உமரி காட்டேஜ் பகுதியில் சாலை பிளவுற்று சரிந்தது. காட்டேரியில் இருந்து பர்லியாறு வரை 15-க்கும் மேற்பட்ட பகுதிகளில் பாறை மற்றும் மண் விழுந்தன. பொக்லைன் இயந்திரம் மூலம் அவற்றை அகற்றி, சாலையைச் சீரமைக்கும் பணி நடைபெற்றது. இதனால், குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து தடைபட்டது. சாலையின் இருபுறமும் பல மணி நேரம் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

பேருந்து மீது முறிந்து விழுந்த மரம்: இதற்கிடையே, அவ்வழியே சென்று கொண்டிருந்த அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து மீது மரம் முறிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் முழுவதும் நேற்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதேபோல, கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை குஞ்சப்பனை பகுதியில் மரங்கள் விழுந்து கிடந்ததால், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கோத்தகிரி, குன்னூர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நீலகிரி மாவட்டத்துக்கு வருவதை தவிர்க்குமாறு சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மு.அருணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “மேட்டுப்பாளையம்-கோத்தகிரி பாதையைப் பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும். மேட்டுப்பாளையம், உதகை செல்ல குன்னூர்பாதையைப் பயன்படுத்தலாம். மீட்புப் பணிக்காக, கோவையில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு இரண்டு பேரிடர் மீட்புக் குழுவினர் வருகின்றனர்” என்றார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours