3 நாள் பயணமாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விமான மூலம் இன்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 19ம் தேதி துவங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வருகிற ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலை அமைதியாக நடத்த தேர்தல் ஆணையமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
17ம் தேதி மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற உள்ளது. இதனால் இறுதிக்கட்ட சூறாவளி பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். ஆளுநருடன் அவரது செயலாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் உடன் சென்றனர்.
3 நாட்கள் பயணமாக டெல்லி செல்லும் ஆளுநர், வருகிற 17ம் தேதி மாலை சென்னை திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் டெல்லி சென்று உள்துறையில் தமிழ்நாடு அரசியல் நிலவரம் குறித்து அவர் தகவல்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது மாதாந்திர பயணமாக அவர் டெல்லி சென்றுள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
+ There are no comments
Add yours