ஆண்டிப்பட்டி அருகே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சித்தார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் அவரது மனைவி தமிழ்செல்வி. இந்த தம்பதிக்கு 2 வயதில் லித்திகா ஸ்ரீ என்ற பெண் குழந்தையும் 7 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இரண்டு வயது சிறுமி லித்திகா ஸ்ரீக்கு வாயில் திடீரென நுரை தள்ளியபடி அழுதது இதையடுத்து அதிர்ச்சியடைந்த தாயார் தமிழ்ச்செல்வி உடனடியாக குழந்தையை அருகில் உள்ள ராஜதானி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 400க்கு அதிகமாக இருந்ததாக கூறினர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக குழந்தையை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ச்சியாக அந்த குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து ராஜதானி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வரும் நிலையில் இரண்டு வயது பெண் குழந்தை பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதி மக்களிடைய பெரும் அதிர்ச்சியையும் சித்தார்பட்டி கிராமத்தில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது
+ There are no comments
Add yours