அரியலூரில் வாக்கு எண்ணும் பணிக்காக தயாராகிக் கொண்டிருந்த பெண் கிராம உதவியாளர், வாக்கு எண்ணும் மையத்தில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. நாளை நாடு முழுவதும் ஒரே கட்டமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை ஒட்டி, இங்கும் வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையொட்டி போலீஸார், வருவாய் துறையினர், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் வாக்கு எண்ணும் மையத்திற்கு தினசரி வந்து செல்கின்றனர். அதன் ஒரு பகுதியாக வெண்மான்கொண்டான் கிழக்கு வருவாய் கிராமத்தில் கிராம உதவியாளராக பணியாற்றி வரும் ராஜேஸ்வரி என்பவரும் இந்த பணிக்காக வருகை தந்திருந்தார்.
நேற்றிரவு வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென ராஜேஸ்வரிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவர் வாக்கு என்ன மையத்திலேயே திடீரென மயங்கி விழுந்ததால் அரசு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார். இது குறித்து உடையார் பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராஜேஸ்வரியின் உடல் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பணியில் இருந்த போதே ராஜேஸ்வரி உயிரிழந்த சம்பவம் சக அரசு ஊழியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
+ There are no comments
Add yours