திமுக கூட்டணியில் புயல் கிளம்பியிருக்கிறது..இனிமேல் தான் இருக்கிறது- ஈபிஎஸ்

Spread the love

மேட்டூர்: “ திமுக கூட்டணியில் புயல் கிளம்பியிருக்கிறது. இனிமேல் தான் அதன் பாதிப்பை பார்க்க முடியும்.” என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.

சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம் இன்று (அக்.22) நடந்தது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது: கட்டிடத்தின் வலிமைக்கு அஸ்திவாரம் வலுவாக உள்ளதைப் போல அதிமுகவில் கிளைக் கழகம் வலுவாக உள்ளது. எடப்பாடியில் எதிரிகள் புறமுதுகைக் காட்டி ஓடிவிட்டனர். எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெற்று சரித்திர சாதனை படைக்கும். நாடாளுமன்றத் தேர்தல் வேறு; சட்டப்பேரவை தேர்தல் வேறு. அடுத்து வரும் ஃபைனல் மேட்சில் அதிமுகதான் வெற்றி பெரும். மக்களுக்கு உண்மை செய்திகள் ஒருநாள் தெரிய வரும் போது திமுக காணாமல் போகும்.

திமுக கட்சியில் பலமில்லை, கூட்டணி பலத்தையே திமுக நம்பி உள்ளது. கூட்டணி கட்சிகள் கைவிட்டால் திமுக கீழே விழுந்துவிடும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் வெற்றி, தோல்விகளை மாறி மாறி சந்தித்த கட்சி அதிமுக. எந்தக் கட்சிக்கும் வெற்றி, தோல்வி நிரந்தரம் இல்லை. தமிழகத்தில் 30 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே கட்சி அதிமுக தான். இதனால் தான் தமிழகம் இன்றைக்கு நாட்டின் முதன்மை மாநிலமாக விளங்குகிறது.

அதிமுகவில் மட்டும் தான் சாதாரண தொண்டன் கூட உயர்ந்த பதவிக்கு வர முடியும். எந்த ஆட்சியும் நிந்தரம் இல்லை. தற்போது மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. உதயநிதி, ஒரு செங்கல்லை தூக்கிக் கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. சிறப்பான ஆட்சிக்கு எடுத்துக்காட்டு அதிமுக ஆட்சிதான். உதயநிதியை துணை முதல்வராக்கியது மட்டும் தான் திமுக அரசின் சாதனை. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்தவுடன் மறந்து அந்தர்பல்டி அடிக்கும் ஒரே கட்சி திமுக.

திமுகவில் வாரிசு அரசியல்தான் நடக்கிறது. கருணாநிதிக்கு அடுத்து ஸ்டாலின், தற்போது உதயநிதியை முன் நிறுத்துகிறார்கள். இது ஒருபோதும் நடக்காது. திமுக மூலம் மன்னராட்சியை மீண்டும் தொடங்க நினைக்கிறார்கள். கருணாநிதி குடும்பத்தில் பிறந்ததால் தான் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கிடைத்தது. 50 ஆண்டு காலம் கட்சிக்காக உழைத்து படிப்படியாக உயர்ந்ததால் தான் எனக்கு பொதுச்செயலாளர் பதவி கிடைத்தது. கட்சியில் மூத்த நிர்வாகிகள் பலர் இருந்தும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். துணை முதல்வர் பதவிக்கு திமுகவில் உதயநிதியை தவிர வேறு ஆளா இல்லை.

ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரின் குடும்பத்தைச் சேர்ந்த வேறு ஒருவருக்கு பதவி கொடுக்க வேண்டும் என்பதற்காக வேக வேகமாக உதயநிதிக்கு அடுத்தடுத்து பதவிகளை வழங்கி வருகிறார்கள் என மக்கள் பேசுகிறார்கள். உதயநிதிக்கு எந்த அனுபவமும் இல்லை. மிசாவில் சிறைக்குச் சென்ற வேறு யாருக்கும் துணை முதல்வர் பதவி தரவில்லையே. மூத்த நிர்வாகிகளை தூக்கி எறிந்துவிட்டு, ஜெட் வேகத்தில் உதயநிதிக்கு பதவியை வழங்கியுள்ளனர். உதயநிதிக்கு பதவியை மக்கள் கொடுக்கவில்லை. குடும்ப உறுப்பினரான முதல்வர் ஸ்டாலின் தான் வழங்கி உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

விஜய் மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள்: பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “திமுக ஆட்சியில் பெரும்பாலான துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள் பெரிய அளவில் ஊழலில் ஈடுபட்டுள்ளனர். 2026-ல் அதிமுக ஆட்சி அமைந்ததும் ஊழல் பட்டியல் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். வெள்ளை அறிக்கை எனக்காக கேட்கவில்லை; மக்களுக்காகத் தான் கேட்டேன். திமுக கூட்டணி வலிமையாக இருக்கிறது என்று சொன்னார்கள்.

ஆனால், அங்கு புகைய ஆரம்பித்து விட்டது. கூட்டணி குறித்து தேர்தலின் போதுதான் சொல்ல முடியும். நாடாளுமன்றத் தேர்தலோடு இதை ஒப்பிட முடியாது. அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும். போதுமான அளவுக்கு புதிய பேருந்துகள் வாங்காததால் தீபாவளிக்காக தனியார் பேருந்துகளை அணுக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு நபருக்கும் ஒரு ஆசை உள்ளது. முன்னணி நடிகராக உள்ள விஜய்க்கு ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. பொது சேவை செய்ய வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் கட்சி தொடங்கியுள்ளார். அவர்களது மாநாடு வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மாநாட்டுக்கு அனுமதி கொடுப்பதில் திமுக அரசு கெடுபிடி செய்கிறது. பொதுக்கூட்டமோ, மாநாடோ எது நடந்தாலும் அனுமதி மறுப்பதுதான் திமுக ஆட்சியின் நிலை.

கூட்டணி ஆட்சி குறித்து யூகத்தின் அடிப்படையில் பதிலளிக்க முடியாது. திமுக கூட்டணியில் புயல் கிளம்பியிருக்கிறது. இனிமேல் தான் அதன் பாதிப்பை பார்க்க முடியும்.” என்றார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours