அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிற்கு தான் அழுத்தம் கொடுத்ததாலேயே அப்துல் கலாம் ஜனாதிபதியானார்” என்று புத்தக வெளியிட்டு விழாவில் தமிழக முன்னாள் ஆளுநர் ராம்மோகன்ராவ் தெரிவித்துள்ளார்.
2002 முதல் 2004 ஆம் ஆண்டு வரை தமிழக ஆளுநராக இருந்தவர் ராம்மோகன்ராவ். அவர் எழுதிய “Governorpet To Governor’s House A Hick’s Odysse” என்ற புத்தகம் வெளியீட்டு விழா தமிழக ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். விழாவில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் எம்.கே.நாராயணன், ஆந்திரா மாநில முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் தமிழக முன்னாள் ஆளுநர் ராம் மோகன்ராவ் பேசுகையில், “2002 முதல் 2004 வரை தமிழக ஆளுநராக பணியாற்றி உள்ளேன். தமிழகம் சிறந்த மாநிலம். ஆந்திர காவல்துறையில் டிஜிபி வரை பணியில் இருந்தது பல அனுபவங்களை கற்று தந்துள்ளது. பல சூழ்நிலைகளை கையாண்டுள்ளேன். இக்கட்டான சூழ்நிலையையும் பார்த்துள்ளேன். குறிப்பாக மத்திய உளவுத்துறையில் பணியாற்றியது தன்னை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றது. நான் எழுதிய புத்தகத்தில் என் அனுபவங்கள் பலவற்றை குறிப்பிட்டுள்ளேன்.
இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் ஆந்திராவைச் சேர்ந்த சஞ்சீவி ரெட்டியை தான் நாங்கள் பரிந்துரைத்தோம். ஆனால் அதில் இந்திரா காந்தியோ வி.வி.கிரியை தான் ஜனாதிபதியாக ஆக்க விரும்பினார். இறுதியில் ஜனாதிபதி தேர்தலில் சஞ்சீவ் ரெட்டியே வெற்றி பெற்றார்.
இந்த சுவாரஸ்யத்தை புத்தகத்தில் பதிவிட்டுள்ளேன். இதே போல அப்துல் கலாம் அவர்களை ஜனாதிபதியாக பரிந்துரை செய்தது நான் தான். அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் அப்துல் கலாமை பரிந்துரை செய்யும்படி கேட்டு கொண்டேன். அவர் முதலில் ஒப்புக்கொண்டார். ஆனால் பிறகு ஜெயலலிதா அந்த முடிவில் இருந்து பின்வாங்கினார். இருந்தாலும் என்னுடைய அழுத்தத்தால் இறுதியில் ஒப்புக்கொண்டார். அதை போல அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் கூட கிருணகாந்தை தான் ஜனாதிபதியாக்க முடிவு செய்தார். ஆனால் என்னுடைய முயற்சியாலேயே அப்துல் கலாம் ஜனாதிபதியானார். அதனை கூட புத்தகத்தில் எழுதி உள்ளேன்” என்று தமிழக முன்னாள் ஆளுநர் ராம்மோகன் ராவ் பேசியுள்ளார்.
இதைத்தொடர்ந்து பேசிய தற்போதைய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “இந்த விழாவிற்கு மிகச்சிறந்த ஆளுமைகள் வந்துள்ளார்கள். எம்.கே.நாராயணன் தலைமையில் நான் பணியாற்றியது நல்ல அனுபவத்தை கற்றுத்தந்தது.
ஆந்திர மாநில முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் பொருளாதார வல்லுனர். ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்துள்ளார்.
ராம் மோகன் ராவ் எழுதியுள்ள புத்தகம் சிறப்பான புத்தகம். அனைவரும் படிக்க வேண்டும். அவர் தற்போதும் இளைமையாக இருக்கிறார். அவர் 100 வயதுக்கு மேல் வாழ வேண்டும். நான் நாகலாந்து கவர்னராக இருந்தபோது அந்த மாநிலத்தில் 110 வயதுக்கு மேல் வாழ்ந்தவர்களை சந்தித்துள்ளேன்” என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours