புதுடெல்லி: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது பாத யாத்திரையில் நிகழ்த்தும் உரைகள் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றன. இதை காரணம் காட்டி அதிமுக சமீபத்தில் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது. இதையடுத்து அண்ணாமலை பதவி நீக்கப்படுவார் எனச் செய்திகள் பரவுகின்றன. டெல்லிக்கு சென்ற அண்ணாமலைக்கு கட்சித் தலைமை பலஅறிவுறுத்தல் அளித்து அனுப்பியதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதுபோன்ற தகவல்கள் இருந்தாலும், கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியதற்கு பாஜக கேட்கும் குறிப்பிட்ட தொகுதிகளே காரணம் எனத் தெரியவந்துள்ளது. அடுத்த வருடம் வரவிருக்கும் மக்களவை தேர்தலில் பாஜக 15 முதல் 20 தொகுதிகள் வரைஒதுக்க, அதிமுகவிடம் வலியுறுத்தி இருந்தது. இந்த தொகுதிகள் அனைத்தும் திமுக பலம் குறைந்துள்ள தொகுதிகள் என்பது பாஜகவின் கணிப்பு.
இதுபோல், திமுக பலம் குறைந்த தொகுதிகள் அதிமுகவின் பலம் வாய்ந்த தொகுதிகளாக இருப்பது இயல்பாகும். இவற்றை அதிமுகவிடம் இருந்து பறித்து அக்கட்சியின் ஆதரவில் தாம் வெற்றிபெற பாஜக திட்டமிடுவதாக சொல்லப்படுகிறது. இவற்றில் சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்டகொங்கு மண்டலப் பகுதிகள் முக்கியமாக உள்ளன. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அதிமுகதலைவர்கள், ஒரு குழு அமைத்துஅறிக்கை தயார் செய்திருந்தனர். இந்த அறிக்கை கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்ற மக்களவை தேர்தல் பற்றிய புள்ளிவிவரங்களை கொண்டிருந்தது.
இந்த அறிக்கையுடன் முன்னாள் முதல்வர் பழனிசாமி கடைசியாக டெல்லிக்கு வந்தபோது மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அப்போது அவரிடம் பாஜக கேட்கும் தொகுதிகளை தம்மால் ஒதுக்க முடியாதநிலையை விளக்கியிருந்தார். இதை அமைச்சர் அமித்ஷா சற்றும் ஆர்வம் இன்றி கேட்டதாகத் தெரிகிறது.
இதுகுறித்து ’இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் பாஜகவின் தேசியநிர்வாகிகள் வட்டாரங்கள் கூறும்போது, “கர்நாடகாவில் ஆட்சியை இழந்த பின் எங்கள் தலைமை தமிழகத்தின் மீது அதிக கவனம் செலுத்துகிறது. மக்களவை தேர்தலில் இங்கு பாஜக கணிசமான தொகுதிகளை பெறுவது முக்கியம். இதில் தாம் பாதிக்கப்படுவதாக கூறி அதிமுக விலகிச் சென்றுள்ளது. இதற்கு தேர்தல் வெற்றிக்கு பின் பாஜக ஆட்சி அமைய உறுதியாக ஆதரவு அளிப்பதாக கூறுகின்றனர். எனினும் அதிமுகவின் கூட்டணி முறிவில் எங்களுக்கு ஒப்புதல் இல்லை. இச்சூழலை சமாளிக்க தீவிரமாக யோசித்து வருகிறோம். அதிமுக கூட்டணி முறிவின் மீது அறிக்கை கேட்கவே அண்ணாமலை டெல்லிக்கு அழைக்கப்பட்டார். அவர் மஞ்சள், தேயிலை தூள் உள்ளிட்ட சில பொருட்களுக்கு வரிவிலக்கு கேட்கவே நிதியமைச்சர் நிர்மலாவை சந்தித்தார். அண்ணாமலையின் பாத யாத்திரையால் பாஜக வளரும் நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கான தேவை இல்லை” என்று தெரிவித்தன.
பாஜகவின் இந்துத்துவா அரசியலை தமிழகத்தில் அரங்கேற்றுவது தொடர்ந்து சிக்கலாக உள்ளது. எனினும், ஒரு மாநிலத்தில் செல்வாக்கான கட்சியுடன் கூட்டணி வைத்தே அங்கு பாஜக வளர்வது வரலாறாகி விட்டது. பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம், கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம், மகாராஷ்டிராவில் சிவசேனா, பஞ்சாபில் சிரோமணி அகாலி தளம் ஆகியவை பாஜக கால் பதிக்க உதவின. இதுபோன்று தமிழகத்தில் அதிமுகவின் தேவை பாஜகவுக்கு உள்ளது.
ஆனால் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் வெல்வது கடினம் என்பதை அதிமுக உணர்கிறது.மேலும் தோல்வி அடைந்தால் அடுத்து வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் எதிரொலிக்கும் அபாயம் உள்ளதாக அதிமுக கருதுகிறது. எனவே, மக்களவைத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்டு தேர்தலுக்கு பின் பாஜகவுக்கு ஆதரவளிக்கும் எண்ணத்தில் உள்ளது. இதன் காரணமாக அதிமுகவிலிருந்து பிரிந்த தலைவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் பாஜக இறங்கும் என்று தெரிகிறது
+ There are no comments
Add yours