மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக கட்சி அங்கும் வகிக்கிறது என்று கூறப்பட்டாலும், தமிழகத்தில் பாஜக – அதிமுக இடையே கருத்து மோதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதிமுக தலைவர்கள் பற்றி, குறிப்பாக அண்ணா பற்றி அண்மையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசிய கருத்துக்கள் பெரும் விவாதத்தை உண்டாக்கியது. மேலும், அதிமுக தரப்பினரிடையே கடும் கண்டனங்கள் எழுந்தன.
இதன் காரணமாக அதிமுக – பாஜக கூட்டணி தற்போது இல்லை என்றும், தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் முன்னாள் அமைச்சரும், அதிமுக முக்கிய நிர்வாககியுமான ஜெயக்குமார் தெரிவித்து இருந்தார். இதனை அடுத்து நேற்று முன்தினம் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், அதிமுக – பாஜக கூட்டணியில் தற்போது எந்த பாதிப்பும் இல்லை. அண்ணாமலை தான் அதிமுக தலைவர்களை பற்றி விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பிரதமர் நரேந்திர மோடியை தலைவராக ஏற்றுக் கொள்பவர்களை நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், தமிழகத்தின் அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்பதை என்னால் கூற முடியாது. அது தேசிய தலைமை தான் கூற வேண்டும். என்று பேசி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த சமயத்தில் தான் நேற்று அதிமுக முக்கிய நிர்வாகிகள் தங்கமணி, வேலுமணி, சி.வி சண்முகம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி ஆகியோர் பாஜக தலைவர்களை சந்திக்க டெல்லி புறப்பட்டனர். அவர்கள் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக முக்கிய தலைவருமான அமிர்ஷாவை சந்திக்க நேரம் கேட்டனர். ஆனால் பல்வேறு அலுவல் பணிகள் காரணமாக அதிமுக நிர்வாகிகளை சந்திக்க அமித்ஷா தரப்பு நேரம் ஒதுக்கவில்லை.
இதனை அடுத்து மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உடன் இருந்தார். பாஜக தேசிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினாலும், மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க முடியவில்லை என்று ஏமாற்றத்தில் நேற்று இரவு டெல்லியில் இருந்து தமிழகம் திரும்பினார் அதிமுக நிர்வாகிகள்.
தமிழகத்தில் அதிமுக – பாஜக இடையே கருத்து மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில், அதிமுக நிர்வாகிகளை அமித்ஷா சந்திக்காதது அரசியல் வட்டாரத்தில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வரும் காலங்களில் பாஜக – அதிமுக கூட்டணியில் ஏதேனும் விரிசல் ஏற்படுமா என கேள்வி எழுந்துள்ளளது.
+ There are no comments
Add yours