மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே தில்லையாடியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பட்டாசு கடையில் இன்று பிற்பகல் 3 மணி அளவில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் வேலையில் ஈடுபட்டு வந்த 4 தொழிலாளர்களும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பட்டாசு கடையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் நிதி உதவி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பான அறிக்கையில், மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு கடையில் இன்று மதியம் வெடிகளை பார்சல் செய்யும்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் கிடங்கல் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம், மயிலாடுதுறை சேர்ந்த மதன், மகேஷ் மற்றும் ராகவன் ஆகிய நான்கு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
இவ்விபத்தில் காயமடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 4 நபர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours