அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றியது – வைகோ பரபரப்பு பேச்சு

Spread the love

திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கனத்த இதயத்துடன் பேசியுள்ளார். சென்னை எழும்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது:-

ஈழத்திற்கு சென்று பிரபாகரனை சந்திக்க வேண்டும் என சீட்டு மூலம் இரண்டு முறை கூறிய பின்னர்தான் பிரபாகரன் நான் ஈழத்திற்கு வர சம்மதம் தெரிவித்தார். அதன் பின்னர் இங்கிருந்து புறப்படும் முன் என் மனைவிக்கு பட்டு புடவை என்னுடைய குழந்தைகளுக்கு புதிய ஆடைகள் எடுத்து கொடுத்தேன். மீண்டும் நான் வருவேனா என கேள்வி இருந்ததால் இதை செய்தேன். ஆனால், என் மனைவியிடம் திமுக வெற்றி பெற்றதற்கு வாங்கி தந்தேன் என கூறினேன்.

யாருக்கும் தெரியாமல் ஈழத்திற்கு புறப்படும் முன் கருணாநிதிக்கு 6 பக்கம் கடிதம் எழுதி விட்டு சென்றேன். ஈழத்தில் இருந்த நேரத்தில் வைகோ ஈழத்திற்கு சென்றதற்கும் திமுகவிற்கு எந்த சம்மதமும் இல்லை என அறிக்கை வெளியிட்டனர். இதனை தெரிந்துகொண்ட பிரபாகரன், உடனடியாக நீங்கள் தமிழ்நாடு செல்ல வேண்டும் என தெரிவித்தார். ஆனால் நான் செல்ல மாட்டேன் என கூறினேன். இருப்பினும் அவர் வலியுறுத்தி கூறியதால் நான் செல்கிறேன் என கூறினேன். அடுத்த நாள் காலை 5 மணிக்கு புறப்படும் முன் எனக்கு புட்டு,மீன், இறால் என விருந்து வைத்தார்.

ஒருவேளை நான் மாட்டிக்கொண்டால் என்னை சித்திரவதை செய்வார்கள் எனவே எனக்கும் ஒரு சைனைட் குப்பி வேண்டும் என்று கேட்டேன். இதையடுத்து பிரபாகரன் தனது கழுத்தில் இருந்த ஒரு குப்பியை எனக்கு வழங்கினார். இப்போதும் அந்த குப்பி பத்திரமாக என்னிடம் உள்ளது. புறப்பட்டு வந்த நேரத்தில் காட்டில் கடும் பசியாக இருந்த நேரத்தில் மான் கறி உள்ளது என கூறியதும் மகிழ்ச்சியுடன் எழுந்து சாப்பிட்டேன் அதன் பின் நடந்தது அனைவருக்கும் தெரியும்.

எந்த இயக்கத்திற்கா உழைத்தேனோ, எந்த இயக்கத்தை நேசித்தேனோ, அந்த இயக்கமே என்னை வெளியேற்றியது. 30 ஆண்டு காலம் திமுகவில் பயணித்தபோது 27 முறை சிறைக்கு சென்றேன். திமுகவின் தலைவருக்கு உயிருக்கு உயிரான மெய்காப்பாளராக இருந்து இருக்கிறேன். ஆனாலும், நான் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டேன். 1964ல் அண்ணாவின் முன்னிலையில்தான் அங்கீகாரம் பெற்றேன். மதிமுகவில் 30 ஆண்டுகளாக அரசியல் பணி செய்து வருகிறேன். எனது வாழ்நாளில் 60 ஆண்டுகள் பொதுவாழ்விலேயே கடந்துவிட்டது.

கட்சியில் ஒவ்வொரு நாளும் ஒரு 5 இளைஞர்களை இணைக்க முயற்சி செய்யுங்கள். கொடி இல்லாத கொடிமரங்களில் கொடிகளை ஏற்றுங்கள். அமைப்பை அடிமட்டத்திலிருந்து வலுப்படுத்துங்கள். அப்போது தான் நமக்கான நாள் வரும்” என தொண்டர்களுக்கு வைகோ அறிவுரை வழங்கினார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours