அடக்குமுறையால் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது… அன்புமணி ராமதாஸ்!!

Spread the love

ஆசிரியர்கள் இப்போது முன்வைக்கும் அனைத்து கோரிக்கைகளும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த வாக்குறுதிகள் தான். ஆசிரியர்களின் போராட்டத்தை சரியான முறையில் கையாளாமல், அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு அவர்களை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருப்பதாவது..

“சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் 3 வகையான ஆசிரியர்களின் சில கோரிக்கைகளை அரைகுறையாக நிறைவேற்றுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஆனால், தங்களின் கோரிக்கைகள் முழுமையாக ஏற்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்று ஆசிரியர் சங்கங்கள் அறிவித்திருந்த நிலையில், அறப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களை கைது செய்து அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் 3 வகையான ஆசிரியர் அமைப்புகள் கடந்த 11 நாட்களாக தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டம் நடத்திய ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வி இயக்குனர், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் பல்வேறு கட்டங்களில் நடத்திய பேச்சுகள் வெற்றி பெறாத நிலையில், பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளுடன் நேற்று கலந்தாய்வு நடத்திய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தன்னிச்சையாக சில அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்.

பணி நிலைப்பு கோரி போராட்டம் நடத்தி வரும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.2500 ஊதிய உயர்வு வழங்கப்படும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டைக் களைய 3 உறுப்பினர் குழு அமைக்கப் படும், தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர் பணிக்காக காத்திருப்போருக்கு ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பு 58 ஆக உயர்த்தப்படும் என்று அமைச்சர் அறிவித்தார். ஆனால், இது ஆசிரியர்களின் கோரிக்கைகளில் சிறு பகுதியைக் கூட நிறைவேற்றவில்லை என்பது தான் உண்மை.

அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப் பட்டிருந்தால் குறைந்தது ரூ.40 ஆயிரம் ஊதியமாக கிடைத்திருக்கும். ஆனால், அதை செய்யாத அரசு, ரூ.2500 ஊதிய உயர்வு வழங்குவது எந்த வகையில் நியாயம்?

தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு 2018 வரை போட்டித் தேர்வு நடத்தப்படவில்லை. 2018 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் நாள் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 149 இன் படி தான் போட்டித்தேர்வு திணிக்கப்பட்டது. அதை அப்போதே திமுக எதிர்த்தது. அப்படிப்பட்ட அரசாணையை ரத்து செய்வதற்கு கூட திமுக அரசு முன்வரவில்லை என்றால், இந்த அரசுக்கும், முந்தைய அரசுக்கு வேறுபாடு என்ன?

ஆசிரியர்கள் இப்போது முன்வைக்கும் அனைத்து கோரிக்கைகளும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த வாக்குறுதிகள் தான். திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசு இன்னும் கூடுதல் காலக்கெடு கோருவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அரசின் இந்த நிலைப்பாட்டை மக்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

ஆசிரியர்களின் போராட்டத்தை சரியான முறையில் கையாள தமிழக அரசு தவறி விட்டது. போராட்டம் தொடங்கி 6 நாட்கள் வரை அவர்களுடன் பேச்சு நடத்துவதற்கே அரசு முன்வரவில்லை.

ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசால் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை என்றால், அவர்களை அழைத்துப் பேசி, அரசின் நிலைமையை விளக்கி, ஒரு சில கோரிக்கைகளையாவது நிறைவேற்றி அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால், அரசு அதன் தீர்வுகளை ஆசிரியர்கள் மீது திணித்தது தான் போராட்டம் தொடர்வதற்கு காரணம் ஆகும்.

இந்த உண்மைகளையெல்லாம் உணராமல், அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களை இன்று காலை காவல்துறையினர் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ள ஆசிரியர்களை தமிழக அரசு மீண்டும் அழைத்து பேச வேண்டும்.

அவர்களின் கோரிக்கைகளில் முக்கியமான சிலவற்றையாவது ஏற்றுக் கொண்டு, மீதமுள்ள கோரிக்கைகளை அரசு விரைவில் நிறைவேற்றும் என்ற நம்பிக்கையை அவர்கள் மனதில் அரசு விதைக்க வேண்டும். அதன் மூலம் அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours