அழியும் காலத்தில் ஆணவம் தலைவிரித்தாடும் …திமுக !

Spread the love

அழியும் காலத்தில் ஆணவம் தலைவிரித்தாடும் என்பதற்கு இணங்க, தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் இலட்சினைக்கு காவி வண்ணம் அடிக்கப்பட்டிருப்பதாக பாஜகவை திமுக விமர்சித்துள்ளது.

இதுதொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “வினாச காலே விபரீத புத்தி என வடமொழியில் கூட கூறுவார்கள். அதைத்தான் நாம் அழியும் காலத்தில் ஆணவம் தலைவிரித்தாடும் என்கிறோம். ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே உணவு என்றெல்லாம் இந்திய துணைக்கண்டத்தில் தங்களுடைய கருத்தைத் திணிப்பதில் வக்கிர புத்தியோடு செயல்படுபவர்கள் பாஜக-வினர். அவர்களுடைய எண்ணமும், செயலும் தமிழ்ச் சமுதாயத்திற்கும், தமிழர்களுக்கும் மட்டுமல்ல, ஒட்டு மொத்த மனித சமுதாயத்திற்குமே அழிவைத் தருவதாகும்.

ஒற்றுமை, சமத்துவம், கூட்டாட்சித் தத்துவம், சுயமரியாதை, ஜனநாயகம், அரசியல் அமைப்புச் சட்டம் இவைகளுக்கெல்லாம் எதிரானவர்கள் பாஜக-வினர் என இந்தத் தேர்தல் பிரச்சார காலங்களில் அதிகமாகவே அவர்களுக்கு உணர்த்தினோம். ஆனாலும், அவர்கள் உணர்வதாகத் தெரியவில்லை. உணரமாட்டார்கள். உன்மத்தம் பிடித்தவர்கள் அவர்கள்.

இதன் வெளிப்பாடுதான் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்” என உலக மாந்தர்கள் அனைவரும் சமம் என அறம் பாடிய அய்யன் திருவள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசியுள்ளார்கள். இதைப் பலமுறை நாம் தடுத்தும் கூட தற்போது தூர்தர்ஷன் இலச்சினையிலும் காவிக்கரையை அடித்திருக்கிறார்கள். மீண்டும், மீண்டும் இதைச் செய்கிறார்கள் என்றால், இது ஆணவம் தானே. இந்த ஆணவம் ஜீன் 4-ஆம் தேதி அழிந்தார்கள் என்பதை புலப்படுத்தும்.

இதைத்தான் தமிழக முதல்வர் ஸ்டாலின், “உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசினார்கள். தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தினார்கள். வானொலி என்ற தூய தமிழ்ப் பெயரை ஆகாஷவாணி என சமஸ்கிருத மயமாக்கினார்கள். தற்போது தூர்தசன் இலச்சினையிலும் காவிக்கறையை அடித்திருக்கிறார்கள். தேர்தல் பரப்புரையில் நாம் சொன்னதுபோன்றே, அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜக சதித்திட்டத்தின் முன்னோட்டம்தான் இவை. இந்த ஒற்றைவாத பாசிசத்துக்கு எதிராக இந்திய மக்கள் வெகுண்டெழுவதை 2024 தேர்தல் முடிவுகள் உணர்த்தும்!” என்று தெரிவித்தார்” என்று திமுக கடுமையாக விமர்சித்துள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours