சென்னை: “கள்ளச்சாராய விற்பனையில் பாஜக, அதிமுகவினருக்கு தொடர்புள்ளது என்று தகவல் வருகிறது. பாஜக ஆளும் புதுச்சேரி மற்றும் ஆந்திராவில் இருந்து தான் மெத்தனால் வந்துள்ளது.” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற சம்பவம், யாரும் எதிர்பாராத ஒன்று. வருத்தப்படக்கூடிய சம்பவம் அது. முந்தைய ஆட்சியில் இருந்தவர்களை போல திசைதிருப்பாமல், நிகழ்வு நடந்தவுடன் முதல்வர் ஸ்டாலின் உடனடியாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தார். உண்மையை கண்டறிய சிபிசிஐடிக்கு வழக்கை மாற்றியது மட்டுமில்லாமல், விசாரணை கமிஷனும் அமைத்து முதல்வர் ஸ்டாலின் அதிவேகமாக செயல்பட்டார். ஆனால், திட்டமிட்டு இதை அரசியலாக்குவதற்காக எடப்பாடி பழனிசாமியும், பாஜகவும் இந்த விவகாரத்தை தவறான கண்ணோட்டத்தில் அணுகுகிறார்கள்.
உண்மையிலேயே அவர்களுக்கு அக்கறை இருக்குமானால், இந்த அரசுக்கு அவர்கள் உறுதுணையாக இருந்திருக்க வேண்டும். ஏனென்றால், இந்தச் சம்பவம் நடப்பதற்கு ஒருவாரம் முன்னரே, காவல் அதிகாரிகளிடத்தில் போதைப்பொருள், கள்ளச் சாராயத்தை கட்டுப்படுத்த உத்தரவிட்டார் முதல்வர் ஸ்டாலின். அரசின் நடவடிக்கையை தாண்டி இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உண்மைகள் தெரியவரும். கள்ளச் சாராயம் விற்பனையில் பாஜக, அதிமுகவினருக்கு தொடர்புள்ளது என்று தகவல் வருகிறது. முழுமையாக விசாரணை நடக்காத நிலையில் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். எதோ அவரது ஆட்சியில் கள்ளச் சாராயம் விற்காதது போல் பேசுகிறார். சட்டப்பேரவையில் விவாதம் நடத்த எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். ஆனால், சட்டப்பேரவையில் கேள்வி கேட்க வராமல், நாடகமாடி சென்றுவிட்டார். அதிமுக ஆட்சியில் நடந்தவற்றை எல்லாம் மூடி மறைத்துள்ளார்கள்.
நிர்மலா சீதாராமனுக்கு வரலாறு தெரியவில்லை. 1970க்கு முன்பாக கள்ளச் சாராய மரணங்களை தடுக்கும் பொருட்டு, அப்போது திமுக பொருளாளராக இருந்த எம்ஜிஆர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அக்குழுவின் அறிக்கையின்படியே தமிழகத்தில் மதுக்கடைகள் கொண்டுவரப்பட்டன. இந்த வரலாறு தெரியாமல், திமுக மீது பழி சொல்ல வேண்டும் என்பதற்காக நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். அவர் புரிந்துகொள்ளாமல் பேசுகிறார் என்றால், இபிஎஸ் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல், அவரது ஆட்சியில் நடந்தவற்றை எல்லாம் மறந்துவிட்டு பேசுகிறார்.
குட்கா வழக்கு நான்கு வருடங்களாக நடந்து வருகிறது. இன்னும் அதற்கு முடிவு கிடைக்கவில்லை. இதனையெல்லாம் மறைக்கவே, தற்போது கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்கிறார். சிபிஐ என்ன செய்துகொண்டிருக்கிறது என்பது தெரியாதா?. குட்கா வழக்கில் இதுவரை சிபிஐ எடுத்த நடவடிக்கை என்ன?. திசைதிருப்பி எதாவது பிரச்சினையை கிளப்ப வேண்டும் என்பதற்காக திட்டமிட்டே சிபிஐ விசாரணை கேட்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியால் உறுதியாக எதையும் சொல்ல முடியவில்லை.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவம் தொடர்பாக அதிமுக எம்எல்ஏ புகார் கொடுத்தாக சொல்கிறார்கள். விஷயங்களை தெரிந்த ஒருவர் காவல்துறை மனுவோடு நின்று விடலாமா. முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றார்கள் என்றால் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால், அவர்கள் செய்யவில்லை. அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக கள்ளக்குறிச்சி விவகாரத்தை பூதாகரமாக பார்க்கிறார்கள்.
பொறுப்பற்ற முறையில், இதில் திமுகவுக்கு தொடர்பிருக்கிறது என்று நிர்மலா சீதாராமன் கூறுகிறார். நான் ஆணித்தரமாக கூறுகிறேன், இதில் பாஜகவினருக்கு தொடர்புண்டு. பாஜக ஆளும் புதுச்சேரி மற்றும் ஆந்திராவில் இருந்து தான் மெத்தனால் வந்துள்ளது. அங்கு நடவடிக்கை எடுக்க முடியுமா.?. முதல்வர் ஸ்டாலின் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும். சம்பவம் நடந்தது முதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார் முதல்வர். அங்குள்ள மக்களுக்கு இது நன்றாக தெரியும். யார் யார் காரணம் என்பதும் அம்மக்கள் நன்கு அறிவர். திட்டமிட்டு திமுக மீது பழி சொல்ல வேண்டும் என்பதற்காக முதல்வரை ராஜினாமா செய்ய சொல்லியும், சிபிஐ விசாரணை கோரியும் வருகிறார்கள்.
முதல்வராக இருக்கும்போது சிபிஐ மீது நம்பிக்கை இல்லாத எடப்பாடி பழனிசாமிக்கு திடீரென இப்போது சிபிஐ மீது நம்பிக்கை வர என்ன காரணம்?. விக்கிரவாண்டி தேர்தலை மனதில் வைத்து இப்படியெல்லாம் செயல்படுகிறார்களா என சந்தேகம் வருகிறது. இந்த விவகாரத்தை நாங்கள் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வோம்.
யாராக இருந்தாலும் மனசாட்சிக்கு பொதுவாக பேச வேண்டும். சட்டப்பேரவையில் அதிமுகவினர் அராஜகம் செய்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி இதோடு நிறுத்திக்கொண்டு ஒழுங்கான அரசியலை செய்தால், நாங்களும் ஒழுங்கான அரசியல் செய்வோம். இல்லையென்றால், அவர் போகிற பாதையில் நாங்கள் செல்வோம்.” என்று தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours