தமிழக எம்பிக்கள் குழு சந்திக்க உள்ள நிலையில், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உடன் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
கர்நாடக அணைகளில் இருந்து குறுவை சாகுபடிக்கு திறந்து விட வேண்டிய நீரினை தர கர்நாடகம் மறுத்து வருகிறது. இதனால் தண்ணீர் இன்றி டெல்டா பாசன பகுதிகள் காய்ந்து கிடக்கின்றன. இந்நிலையில் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை திறக்க உத்தரவிடக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. இது தொடர்பான வழக்கு 21ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு காவிரி இடையிலான காவிரி நீர் விவகாரம் குறித்து ஆய்வு செய்ய காவிரி மேலாண்மை ஆணையத்தின் 24வது கூட்டம் தற்போது டெல்லியில் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக நீர்வளத்துறை அணில் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். கர்நாடகம் மற்றும் புதுச்சேரி மாநில அதிகாரிகள் இந்த கூட்டத்தில் காணொளி வாயிலாக பங்கேற்றுள்ளனர்.
இதனிடையே, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் சந்தித்துப் பேசினார். காவிரி ஆணைய தலைவர் ஹல்தர், ஒழுங்காற்று குழு தலைவர் வினீத் குப்தா உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
தமிழக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மத்திய அமைச்சரை சந்திக்க உள்ள நிலையில் சந்திப்பு நடந்துள்ளது. காவிரி ஆணைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், அணைகளின் நீர் இருப்பு, நீர் வரத்து, உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய அறிக்கையை வழங்கி விளக்கம் அளித்துள்ளனர்.
+ There are no comments
Add yours