சென்னை நந்தனத்தில் 47வது சென்னை புத்தகக்காட்சியை இன்று மாலை 4.30 மணிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். இன்று தொடங்கும் புத்தகக் காட்சி ஜனவரி 21ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் புத்தகப் பிரியர்களுக்காக புத்தகக்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு புத்தகக்காட்சி ஜனவரி 3ம் தேதி தொடங்கி ஜனவரி 21ம் தேதி நடைபெறவுள்ளது. 1000 அரங்குகளில் எழுத்தாளர்கள் எழுதிய படைப்புகள் பொதுமக்கள் மற்றும் புத்தக பிரியர்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.
வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை புத்தகக் காட்சி நடைபெறும். விடுமுறை நாட்களில் காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 8.30 மணி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 19 நாட்கள் புத்தகக் காட்சி நடைபெறுகிறது. ஒவ்வொரு நாள் மாலையிலும் சிந்தனை அரங்கில் தமிழகத்தின் தலைசிறந்த அறிஞர்கள், எழுத்தாளர்களின் உரைவீச்சுக்கள் இடம் பெறுகிறது.
புத்தகக் காட்சியை பார்வையிட நுழைவு கட்டணமாக ரூ.10 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறும் விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு புத்தகக்காட்சியை தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள 6 படைப்பாளர்களுக்கு கலைஞர் பொற்கிழி விருது, சிறந்த படைப்பாளர் மற்றும் நூலகர் உள்ளிட்ட விருதுகளை முதல்வர் வழங்கி சிறப்புரையாற்ற உள்ளார்.
+ There are no comments
Add yours