மழை ஓய்ந்த நிலையிலும் வெள்ளம் வடியாமல் தவிக்கும் மக்கள்!

Spread the love

மிக்ஜாம் புயலால் கனமழை வெளுத்து ஓய்ந்த நிலையிலும் சென்னையில் வேளச்சேரி, பள்ளிக்கரணை, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, ஒக்கியம் துரைப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மேற்கு தாம்பரம் ஆகிய பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை கடந்த சில நாட்களாக புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் நேற்று மாலை ஆந்திர மாநிலம், பாபட்லா அருகே 110 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்தது. சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை, வெள்ளம் ஓய்ந்தாலும் கூட சில பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் வடியாததால் மக்கள் முடங்கியுள்ளனர்.சென்னையில் வேளச்சேரி, பள்ளிக்கரணை, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, ஒக்கியம் துரைப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மேற்கு தாம்பரம் ஆகிய பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (டிச.6) காலை நிலவரப்படி சென்னை வேளச்சேரியில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தனியார் படகுகள் மூலம் மக்கள் வெளியேறி வருகின்றனர். குடிதண்ணீர், பால், உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் பெற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் மின்சாரம், செல்போன் சேவை இன்னும் கிடைக்கவில்லை. ஒருசில பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்களை வழங்கும் பணி தற்போதுதான் தொடங்கியுள்ளது. ராணுவம் இந்தப் பணியை மேற்கொண்டுள்ளது.

ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் இந்திய கடலோர காவற்படை வீரர்கள் படகுகள் மூலம் மக்களை மீட்கும் பணியை இன்று காலை தான் முடுக்கிவிட்டுள்ளனர். மழை வெள்ளம் வடியாததால் மேடவாக்கம் – சோழிங்கநல்லூர் சாலையில் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது.

மேற்கு தாம்பரத்தில் கிஷ்கிந்தா சாலையில் உள்ள 1000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இன்னும் மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன, இங்கே 3 நாட்களாக மக்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முடிச்சூர் வரதராஜபுரம், அமுதன் நகர் பகுதியில் வெள்ள நீர் வடியாததால் பல குடும்பங்கள் சிக்கித் தவிக்கின்றன. குடிநீர், மின்சாரம் இல்லாமல் தவிப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். முடிச்சூர் ஏரி முழுவதுமாக நிரம்பி வழிவதால் கால்வாய்களில் நீர் வெளியேறாமல் அது குடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்துள்ளதாகத் தெரிகிறது. முடிச்சூர் ஏரி, மழைநீர் வெளியேறும் கால்வாய்களை முறையாக அவ்வப்போது தூர்வாரியிருந்தால் இவ்வாறு தண்ணீர் தேங்காது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

வண்ணாரப்பேட்டையில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து குடியிருப்பு பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதாகக் கோரி மக்கள் சாலைகளில் திரண்டனர். கொசுத் தொல்லை அதிகரித்துள்ளதாகவும், வெள்ள நீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவை தவிர சென்னையின் மிகவும் பகட்டான பகுதியாக அறியப்படும் போயஸ் கார்டன் பகுதியிலும் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. சென்னை அரும்பாக்கம் சாலையில் தேங்கியுள்ள தண்ணீரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாலவாக்கம், கந்தன்சாவடி, பெருங்குடி என பகுதிகளில் வெள்ளம் முழுமையாக வடியவில்லை. சென்னை கேகேநகர் பாரதிதாசன் காலனியில் மழை நீர் சூழ்ந்துள்ளது. 1000 குடும்பங்கள் சிக்கியுள்ள நிலையில், இந்தப் பகுதியில் அமைச்சர் ரகுபதி நேரடியாக ஆய்வு செய்தார். தற்போது அங்கு படகு மூலம் உணவு, நீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

மின்சார சேவையும் மீளவில்லை. மின் நிலையங்கள் பல தண்ணீரால் சூழப்பட்டுள்ளதால் மின் விநியோகம் படிப்படியாகவே மீட்கப்பட இயலும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை சென்னை தரமணி பொதுமக்களுக்கு வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்கினார். அதேபோல் நேப்பியர் பாலத்தில் கூவம் ஆறு கடலில் கலக்கும் பகுதியில் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

போக்குவரத்தைப் பொறுத்தவரை சென்னை புறநகர் ரயில்கள் அரை மணிக்கு ஒரு ரயில் என்ற வகையில் இயக்கப்படுகிறது. 10க்கும் மேற்பட்ட சுரங்கப்பாதைகளில் நீர் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டு போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. தென் சென்னையில் இன்னும் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து முழுமையாக மீட்டெடுக்கப்படவில்லை. இதனால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours