மிக்ஜாம் புயல் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மெரினா கடற்கரை செல்லும் சாலையில் தடுப்புகள் அமைத்து போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் நாளை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடைவிடாமல் கன மழை பெய்து வருகிறது. மேலும் பலத்த சூறைக்காற்றும் வீசி வருகிறது. புயல் காரணமாக வங்கக்கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.
இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சென்னை மெரினா கடற்கரைக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் தடுப்புகள் அமைத்து போலீஸார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பட்டினப்பாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட கடற்கரைகளுக்கு செல்லும் சாலைகளையும் அடைத்துள்ள போலீஸார் பொதுமக்கள் யாரும் கடற்கரைக்கு வர வேண்டாம் என எச்சரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக ஒலிபெருக்கிகள் மூலம் அவர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். கனமழை காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் தேங்குவதற்கான அபாயம் இருப்பதால், அதனை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அனைத்து துறை அலுவலர்கள் தயார் நிலையில் இருக்குமாறு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
+ There are no comments
Add yours