மதுரை: கோவை கல்லூரி மாணவியை, மதுரைக்கு கடத்தி வந்து பாலியல் வன்கொடுமை செய்த சென்னை இளைஞர் ஒருவர் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கோவை பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி. இவர், கோவையிலுள்ள கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு படிக்கிறார். இவருக்கும், மற்றொரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தனது தோழி மூலம் சென்னை கண்ணம்மாள்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக் (எ) மாரியப்பன் (34) என்பவருடன் அந்த கல்லூரி மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த பிப்வரி 14-ம் தேதி கல்லூரி மாணவியை கார்த்திக் போனில் அழைத்து, கட்டாயப்படுத்தி காரில் ஏற்றி, மதுரை மாவட்டம், நத்தம் அருகிலுள்ள ஹவாவேலி கடவூர் வனப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.
பின்னர், திருமண ஆசை வார்த்தைக் கூறி மாணவியை கார்த்திக் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், மாணவியை கல்லூரி விடுதியில் விட்டுச் சென்றுள்ளார். இதற்கிடையில் கார்த்திக்கை செல்போனில் தொடர்பு கொண்ட மாணவி, தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால், அதற்கு மறுத்த அவர், பாலியல் வீடியோவை மாணவியின் தந்தைக்கு அனுப்பிவிடுவதாகக் கூறி மிரட்டியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவி கடந்த 26-ம் தேதி மதுரை எம்.சத்திரபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், காரில் கடத்தி கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கார்த்திக் மீது ‘போக்சோ’ வழக்குப் பதிவு செய்து தேடினர். இதற்கிடையே கோவையில் அவர் வேறொரு வழக்கில் கைதாகி இருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து எம்.சத்திரபட்டி போலீஸார் கார்த்திக்கை கைது செய்துள்ளனர்.
+ There are no comments
Add yours