சென்னை மாநகர் முழுவதும் பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்களை மூடி, பயனற்ற நிலையில் இருக்கும் சாலைகளை உடனடியாக சீரமைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் கேப்டன் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து கேப்டன் விஜயகாந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
மெட்ரோ ரயில் வழித்தட கட்டுமான பணிகள், மழை நீர் வடிகால் பணிகள், புதை மின் வடம் பதிப்பு உள்ளிட்ட பணிகளால், சென்னையில் உள்ள அனைத்து சாலைகளும் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் படுமோசமாக உள்ளன.
சாலையின் பெரும்பாலான இடங்களில் ஆங்காங்கு குழிகள் தோண்டப்பட்டு அப்படியே கிடப்பதால் வாகன ஓட்டிகள் குறுகிய பாதைகளில் கூட பக்கவாட்டில் மிகவும் சிரமப்பட்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
முன்பெல்லாம் பணிக்கு செல்லும் நேரங்களில் மட்டும் தான் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். தற்பாது சேதமடைந்துள்ள சாலைகளால் காலை முதல் இரவு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் விழிபிதுங்கி கடும் அவதியடைந்து வருகின்றனர்.
குறிப்பாக மழை நாட்களில் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் எது பள்ளம், எது சாலை என்றே கண்டுபிடிக்க முடியாது நிலை உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளங்களில் விழுந்து விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் ஏற்படுகிறது.
சேதமடைந்த சாலைகளில் இருசக்கர வாகனம் ஓட்டுவதால், அடிக்கடி முதுகுவலிக்கு ஆளாக நேரிடுவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சிங்கார சென்னை 2.0 திட்டம் அமல்படுத்தப்பட்டும், திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளை கடந்தும், சாலைகள் மோசமாக உள்ளதால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர். மேலும் நிர்வாகத் திறனற்ற திமுக ஆட்சியை கண்டு மக்கள் கொந்தளித்து போயுள்ளனர். இந்த ஆட்சியில் நடக்கும் எல்லா அவலங்களையும் சகித்து கொள்ள கற்றுக் கொண்டனர்.
சென்னையில் உள்ள கவுன்சிலர்களும் சாலைகளின் நிலைமையை நன்கு அறிந்திருந்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மெத்தனம் காட்டுகின்றனர். சாலை வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் மக்களிடம் இருந்து வசூலிக்கும் திமுக அரசு, சேதமடைந்த சாலைகளை சீரமைக்காமலும், நல்ல நிலையில் உள்ள சாலைகளை சேதப்படுத்துவதையும் வன்மையாக கண்டிக்கிறேன்.
போக்குவரத்து விதிமீறலுக்கு பல மடங்கு அபராதம் வசூலிப்பது, மின் கட்டணம் உயர்த்துவது என மக்கள் மீது பல்வேறு சுமைகளை ஏற்படுத்தி அவர்களுக்கு துன்பங்களை மட்டுமே கொடுத்து வரும் திமுக அரசு, ஓட்டு போட்டு வெற்றி பெற செய்த தமிழக மக்களுக்கு இதுவரை என்ன செய்திருக்கிறது?.
திமுக அரசை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர். இனிவரும் காலங்களில் மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை விரைந்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை முழுவதும் பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை மூடி, பயனற்று கிடக்கும் சாலைகளை உடனடியாக சீரமைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று கேப்டன் விஜயகாந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours