திமுகவுக்கும் சமூக நீதிக்கும் தொடர்பு இல்லை.. அன்புமணி ராமதாஸ் காட்டம் !

Spread the love

விழுப்புரம்: “கருணாநிதி திமுக வேறு, ஸ்டாலின் திமுக வேறு. இப்போது உள்ள ஸ்டாலின் திமுகவுக்கும் சமூக நீதிக்கும் தொடர்பு இல்லை.” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10-ம் தேதி நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் 14-ம் தேதி முதல் துவங்கியது. நேற்றுமுன் தினம் வரை 7 சுயேச்சைகள் மனு தாக்கல் செய்த நிலையில் இன்று திமுக சார்பில் அன்னியூர் சிவா என்கிற சிவசண்முகம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இதனை தொடர்ந்து பாமக வேட்பாளர் சி.அன்புமணி தன் வேட்புமனுவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரிடம் தாக்கல் செய்தார். அப்போது பாமக தலைவர் அன்புமணி, கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, சிவகுமார் எம்எல்ஏ, பாஜக மாநிலத் துணைத் தலைவர் ஏ.ஜி.சம்பத், முன்னாள் எம்எல்ஏ கணபதி, கலிவரதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியது: ”இத்தேர்தலில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி மிகப் பெரிய வெற்றியைப் பெறுவார். இத்தேர்தலில் பணத்தை மட்டும் நம்பி உள்ள திமுகவுக்கும், மக்கள் பலத்தை நம்பியுள்ள எங்கள் வேட்பாளருக்கும்தான் போட்டி. 10 அமைச்சர்கள் இங்கு தங்கி வாக்காளர்களை விலைக்கு வாங்கலாம் என்று கனவில் உள்ளனர். இது நடக்காது. இது எங்கள் தொகுதி. கடந்த காலத்தில் பார்த்தது பென்னகரம் ஃபார்முலா. இப்போது பார்க்கப்போவது விக்கிரவாண்டி ஃபார்முலா. பென்னகரத்தில் 2-வது இடம் வந்தாலும் நாங்கள்தான் உண்மையில் வென்றோம்.

1970-72-ம் ஆண்டு ஒரே ஒரு கரும்பு தொழிற்சாலை தவிர வேறு எதுவும் இல்லை. ஆண்ட, ஆளும் கட்சிகள் எதையும் செய்யவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சமூக நீதி அடிப்படையில் இத்தேர்தலை நாங்கள் பார்க்கிறோம். ஆளும் கட்சிதான் சாதி, மதம் பார்க்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரை நெற்றியில் வியர்வை வரும் அனைவரும் பாட்டாளிதான். சமூக நீதி பற்றி பேச திமுகவுக்கு எள்ளளவும் தகுதி இல்லை. கருணாநிதி திமுக வேறு, ஸ்டாலின் திமுக வேறு. இப்போது உள்ள ஸ்டாலின் திமுகவுக்கும் சமூக நீதிக்கும் தொடர்பு இல்லை.

ஸ்டாலினை சுற்றி உள்ள அமைச்சர்களின் பேச்சை கேட்டு செயல்படுகிறார்கள். அவர்கள் அமைச்சர்கள் அல்ல, வியாபாரிகள். சமுக நீதிக்கும் அமைச்சர்கள் நேரு, பொன்முடி வேலுவுக்கு தொடர்பு உள்ளதா? தொகுதியிலிருந்து வெளியேற்றுமாறு தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளித்துள்ளோம். பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இங்கு இதை நடத்த மனது இல்லை. அதிமுக தேர்தல் புறக்கணிப்பு குறித்து நான் கருத்து சொல்ல முடியாது.

இங்கு பேசிய வன்னியர் சமூக அமைச்சர்கள் எல்லாம் பாமக மீது குற்றச்சாட்டு வைக்கிறார்கள். அவர்கள் அமைச்சர்களாக இருப்பதற்கு பாமகதான் காரணம். அமைச்சர்கள் எம்.ஆர்.கே.ஜெகத்ரட்சகன், சிவசங்கரை வைத்து விமர்சிப்பார்கள். துரை முருகன் விமர்சிக்கமாட்டார்கள். இதுதான் திமுகவின் நிலைப்பாடு. எப்போதும் திமுகவின் வன்னிய அமைச்சர்களை வைத்து விமர்சிப்பதை நாங்கள் பொருட்படுத்துவதில்லை.

மணிமண்டபம் கட்டுவதால் மக்களுக்கு என்ன பயன்? இதெல்லாம் விளம்பர அரசியல். தியாகி குடும்பத்துக்கு கொடுக்கும் 3 ஆயிரம் ரூபாயில் என்ன பயன்? எங்களுக்கு இட ஒதுக்கீடு கொடுங்கள் என்றுதானே கேட்கிறோம். இட ஒதுக்கீட்டு தியாகிகள் குடும்பத்துக்கு நாங்கள் ஆண்டுக்கு ஆண்டு ரூ.1 லட்சம் கொடுக்கிறோம். அதிகாரம் இல்லாமலே இதை செய்துள்ளோம்.

பாஜகவில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக யார் பேசினார்கள். பிஹாரில் 1.86 குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் கொடுத்து அக்குடும்பங்களை முன்னேற்ற முயற்சி எடுத்துள்ளார். இதுதானே சமூக நீதி. நீட் தேர்வு தேவையில்லை என்பது எங்கள் நிலைப்பாடு. ஒரே கொள்கை உள்ள கட்சிகள்தான் கூட்டணி சேரவேண்டும் என்பதில்லை.

கள்ளகுறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராய சாவு குறித்து அரசு விசாரணை மேற்கொண்டு உண்மையை தெரியப்படுத்தட்டும். கள்ளச்சாராய சாவைவிட டாஸ்மாக் சாராயத்தால் ஏற்படும் சாவு பயங்கரமானது. இதனால் எத்தனை குடும்பங்கள் நடுவீதிக்கு வந்துள்ளது என்று எண்ணிப் பார்க்க வேண்டும்” என்று அன்புமணி கூறினார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours