திருநெல்வேலி: வரும் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை நாலுகால் பாய்ச்சலில் திமுக மேற்கொண்டுள்ளது. கட்சி ரீதியில் அமைப்புகளை வலுப்படுத்துவது, அமைப்பு ரீதியாக மாவட்டங்களை பிரித்து, புதிய மாவட்டச் செயலர்களை நியமிப்பது, வாக்குச்சாவடி முகவர்களை அந்தந்த தொகுதி பொறுப்பாளர்கள் நேரடியாக சந்தித்து பணிகளை துரிதப்படுத்துவது என, திமுக சுறுசுறுப்பாக களமாடிக் கொண்டிருக்கிறது.
2 சட்டப்பேரவை தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளரை நியமிப்பது என்ற திட்டத்தில், திருநெல்வேலி, தென்காசி, தேனி, தருமபுரி, அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, நீலகிரி மாவட்டங்களில், 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலர் வீதம் ஏற்கெனவே நியமிக்கப்பட்டு உள்ளனர். அடுத்ததாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட 27 மாவட்டங்கள் கட்சி ரீதியாக பிரிக்கப்படவுள்ளன.
வயது மூப்பு காரணமாக பல மாவட்டச் செயலர்களை ஓய்வெடுக்க செய்யவும், கட்சிக்குள் புதுரத்தம் பாய்ச்சவும் வேலைகள் நடக்கின்றன. வயது மூப்பு காரணமாக மாற்றப்படும் மாவட்டச் செயலர்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் இரா.ஆவுடையப்பன், டிபிஎம் மைதீன்கான், தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்யாணசுந்தரம் என்று பட்டியல் நீளுகிறது. இவர்களுக்கு மாற்றாக, அவர்களது வாரிசுகளே பெரும்பாலும் பொறுப்புக்கு நியமிக்கப்பட இருப்பதாக கட்சிக்குள் பேச்சு எழுந்துள்ளது.
மாவட்டச் செயலர்கள் பட்டியல் தயாரிப்பில் துணை முதல்வர் உதயநிதி, உளவுத்துறை மற்றும் திமுகவுக்கு தேர்தல் வியூகம் அமைக்கும் பென் நிறுவனம் என, 3 குழுக்கள் ஈடுபட்டுள்ளன. இதுதவிர, ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பொறுப்பாளரை நியமித்து, அவர்கள் வாயிலாகவும் கட்சியின் அடிமட்டப் பணிகளை திமுக கண்காணிக்கிறது.
தற்போது, வாக்காளர் பட்டியல் திருத்தம் பணி நடைபெறும் நிலையில், திமுக வாக்குச்சாவடி 2-ம் நிலை முகவர்கள் ஒவ்வொருவரும், எத்தனை இளம் வாக்காளர்களை பட்டியலில் சேர்த்துள்ளனர்? என்ற விவரம் தயாரிக்கப்பட்டு, கட்சி தலைமைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
வாக்குச்சாவடி 3-ம் நிலை திமுக முகவர்கள் ஒவ்வொருவருக்கும், 100 வாக்காளர்கள் வீதம் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 100 வாக்காளர்களுடன், திமுக முகவர்கள் தொடர்பிலேயே இருப்பார்கள். இப்பணிகளுக்கு இடையூறாக இருக்கும் நிர்வாகிகளை களையெடுக்கவும் திமுக தயாராகிவிட்டதாக கட்சிக்குள் பேசப்படுகிறது.
வழக்கமாக தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்னர்தான் ஒவ்வொரு கட்சியும் வாக்குச்சாவடி முகவர்களை நியமிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும். ஆனால், சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கும் நிலையில், திமுகவின் துரித பணிகள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.
+ There are no comments
Add yours