இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தை மெல்லக் கொல்லும் விஷமாக போதைப் பொருள் மாறி வருகிறது. இதை ஒழிக்க போலீஸ் தரப்பில் என்னதான் மெனக்கிட்டாலும், போதைப் பொருள் புழக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. வடசென்னையில் கல்லூரி மாணவர்களே மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை தயாரிக்குமளவுக்கு நிலமை கை மீறிக் கிடக்கிறது.
ரவுடிகளை ஒடுக்க துப்பாக்கியைத் தூக்கிய சென்னை போலீஸ், இன்னொரு பக்கம் போதை மாஃபியாக்களை ஒடுக்கும் வேலைகளையும் முடுக்கிவிட்டது. அப்படித்தான் நைஜீரியர் உள்ளிட்ட வெளிநாட்டு வியாபாரிகள் மட்டுமின்றி உள்ளூர் ஏஜென்டுகளும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
நடிகர் மன்சூர் அலிகான் மகன், சின்னத்திரை நடிகை, உதவி இயக்குநர் என பலரையும் கண்ணிவைத்துப் பிடித்து கப்பிக்குள் தள்ளியது போலீஸ். இந்த விவகாரத்தில் சென்னை மாநகர் காவலைச் சேர்ந்த காவலர்கள் பரணி, ஜேம்ஸ் ஆகிய இருவரும் போதைப் பொருள் விவகாரத்தில் கைதானது தான் யாரும் எதிர்பார்க்காத திகில் திருப்பம்.
வேலியே பயிரை மேய்ந்த இந்த அதிர்ச்சி அலை ஓய்வதற்குள் சென்னையில் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவின் முதல்நிலை காவலர்கள் ஆனந்தன், சமீர் ஆகிய மேலும் இருவர் கைதாகி திகிலை இன்னும் கூட்டினார்கள். இதில் ஒருவர் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரின் உதவியாளர் என்றும் சொல்கிறார்கள்.
இந்தக் காவலர்கள் இருவருக்கும் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவர்கள் பெங்களூருவில் இருந்து மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை வரவழைத்து அதை செல்போன் செயலி மூலம் விற்பனை செய்து லட்சக் கணக்கில் பணம் பண்ணியதாகச் சொல்லும் விசாரணை அதிகாரிகள், இவர்களது முழுமையான பின்னணி குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து சென்னை போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, “மதுவின் விலை அதிகமாக இருப்பதால் பலர் மலிவாக கிடைக்கும் கஞ்சாவுக்கு மாறுகின்றனர். சீக்கிரமே நிறைபோதைக்கு போக நினைப்பவர்கள் செயற்கையாக தயாரிக்கப்படும் மெத்தம்பெட்டமைன் வகை போதைப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதன் ஒரு கிராம் விலையே ஆயிரக் கணக்கில் வரும். இதை நீரில் கரைத்து ஸ்ரிஞ்ச் மூலம் உடலில் குறைவான அளவே செலுத்தினாலும் நீண்ட நேரம் போதை நீடிப்பதாகச் சொல்கிறார்கள். இதேரூட்டில் பலர் வலி நிவாரணி மாத்திரைகளையும் கரைத்து உடலில் ஏற்றிக் கொள்கின்றனர்.
இதற்கான பணப்பரிமாற்றங்கள் கிரிப்டோ கரன்சி மாதிரியான வழிகளில் கையாளப்படுவதால் போதைப் பொருளை யார் கொண்டு வந்து தருகிறார்கள் என்ற விவரம் அதைப் பயன்படுத்துவோருக்கே தெரியாது. அதனால் இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை அடையாளம் காண்பதும் எங்களுக்கும் பெரும் சவாலாக உள்ளது” என்றனர். இளம் தலைமுறையினரை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லும் போதைப் பொருட்கள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
+ There are no comments
Add yours