சென்னை: “நாடெங்கும் நாளை முதல் நமது கொடி பறக்கும், தமிழகம் இனி சிறக்கும். வெற்றி நிச்சயம்” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கூறியுள்ளார். சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் கட்சிக் கொடியை வியாழக்கிழமை காலை 9.15 மணிக்கு நடிகர் விஜய் ஏற்றி வைக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சரித்திரத்தின் புதிய திசையாகவும், புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள்தான் 2024 ஆகஸ்ட் 22. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள்.
தமிழகத்தின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக் கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கழகக் கொடிப் பாடலை வெளியிட்டு, கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதை பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன். நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும், தமிழகம் இனி சிறக்கும். வெற்றி நிச்சயம்,” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். டெல்லியில் தேர்தல் ஆணையத்திலும் கட்சியின் பெயரை பதிவு செய்தார். உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம் உட்பட கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வந்தார். இதையடுத்து, விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டை மிகப் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார். அதற்கான இடம் தேர்வு செய்யும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக மதுரையில் மாநாட்டை நடத்தப்போவதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால், திருச்சியில் ரயில்வேக்கு சொந்தமான ஜி கார்னர் மைதானத்தில் மாநாடு நடத்துவது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் ஆய்வு செய்தார். பின்னர் அந்த இடம் மாநாடு நடத்துவதற்கு போதுமானதாக இல்லை எனக் கூறி சேலம், ஈரோடு, கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாநாட்டுக்கான இடம் தேடும் பணி தொடர்ந்தது.
இதற்கிடையில், விஜய் மாநாடு நடத்த இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதற்கு பிரபல அரசியல் கட்சி ஒன்றின் தலையீடுதான் காரணம் என தவெக நிர்வாகிகள் சிலர் குற்றம்சாட்டினர். இதையடுத்து, தற்போது விக்கிரவாண்டி அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள பல ஏக்கர் காலி இடத்தை புஸ்ஸி என்.ஆனந்த் தேர்வு செய்திருப்பதாகவும் அங்கு செப்.22-ம் தேதி மாநாடு நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மாநாட்டுக்கு முன்பாகவே கட்சியின் கொடியை அறிமுகம் செய்ய விரும்புவதாக புதிய தகவல் ஒன்று வெளியானது. அதை உறுதி செய்யும் விதமாக தவெக தலைவர் விஜய் இப்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கட்சிக் கொடியில் 2 வண்ணங்கள் இடம்பெறும் வகையில் 3 வகையாக வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும், அதில் ஒரு கொடியை விஜய் தேர்வு செய்துள்ளதாகவும், அதனையே அவர் அறிமுகம் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
+ There are no comments
Add yours