ராஜபாளையம்: ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் கனமழை காரணமாக தேவதானம் சாஸ்தா கோயில் அணை நிரம்பி உபரிநீர் வெளியேறி கண்மாய்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராஜபாளையம் அருகே தேவதானம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சாஸ்தா கோயில் அணை மூலம் தேவதானம் பெரியகுளம், நகர குளம், வாண்டையார்குளம், சேர்வராயன் குளம், முகவூர் குளம் உட்பட 11 கண்மாய்களும், 3 ஆயிரம் எக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக சாஸ்தா கோயில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக சாஸ்தா கோயிலில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2:30 மணி அளவில் 36 அடி உயரம் கொண்ட சாஸ்தா அணை முழுவதும் நிரம்பியது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து 500 கன அடிக்கு குறையாமல் வந்து கொண்டிருப்பதால் உபரிநீர் வெளியேறி கண்மாய்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
+ There are no comments
Add yours