கர்நாடகா எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு!

Spread the love

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக நாளை முழு அடைப்பு காரணமாக கர்நாடகா எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் கூறினார்.

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகாவில் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டுக்கு காவிரி நதி நீர் தர உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் நாளை கர்நாடகாவில் பல்வேறு கன்னட அமைப்புகள் நீர் தரக்கூடாது என்பதை வலியுறுத்தி முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளது. கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் அறிவித்துள்ள நிலையில், தமிழக காவல்துறை கர்நாடக மாநில எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, மற்றும் நீலகிரி ஆகிய மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக பயணிகள் பேருந்து போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து தொடர்பாக உள்ளூர் நிலைமைக்கேற்ப கர்நாடக அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து பாதிப்பு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து சோதனை சாவடிகளிலும் உயர் அதிகாரிகளின் தலைமையில் கூடுதல் காவலர்களை நியமித்து பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இரு மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து மற்றும் இதர சந்தேகங்களை பொதுமக்கள் நிவர்த்தி செய்துகொள்ள கிருஷ்ணகிரி மாவட்ட தனிப்பிரிவு அலுவலகம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான எந்த பிரச்சினையாக இருந்தாலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ள பிரத்யேக அலைப்பேசி எண்கள் 9498170430, 9498215407 தமிழக காவல்துறையால் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் காவிரி நதி நீர் பிரச்சினை தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours