மக்களவைத் தேர்தலின்போது கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்திருந்தது. இதற்கான இடம்குறித்து தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆய்வுசெய்தார்.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மக்களவைத் தேர்தல் 2024-ன் போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், கோவையில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார்கள். இந்நிலையில், கோவையில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பதற்கு ஏற்புடைய இடத்தை தேர்வு செய்வதற்கான முதற்கட்டப் பணிகளை இன்று தொடங்கினோம்.
அதன்படி, கோவை ஒண்டிப்புதூரில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என இன்று நேரில் ஆய்வு செய்தோம். தொழில்துறையில் சிறந்து விளங்கும் கோவை மாநகரம், விளையாட்டுத்துறையிலும் உலகமே உற்று நோக்குகிற வகையில் மேலும் உயர்வதை உறுதி செய்வோம்’ என்று தெரிவித்துள்ளார்’ என தெரிவித்துள்ளார்
முன்னதாக மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கோவை தொகுதியின் பொறுப்பு அமைச்சராக இருந்த டிஆர்பி.ராஜா, கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்க வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்தார்.
அதனை தொடர்ந்து அமைச்சர் டிஆர்பி ராஜா கோரிக்கையை ஏற்று கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின்,’விளையாட்டு மற்றும் கிரிக்கெட் ஆர்வலர் என்ற முறையில் மக்களவைத் தேர்தலுக்கான எங்கள் தேர்தல் அறிக்கையில் மேலும் ஒரு வாக்குறுதியை சேர்க்க விரும்புகிறேன். விளையாட்டு ஆர்வலர்களின் கோரிக்கையை மனதில் வைத்து, கோவையில் அதிநவீன கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க முயற்சி எடுப்போம். தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த வாக்குறுதியை அளிக்கின்றேன். சென்னையில் உள்ள சின்னச்சாமி மைதானத்தினைப் போல் கோவையிலும் உலகத் தரத்தில் கிரிக்கெட் மைதானம் கட்டப்படும்’ என தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலில் கோவையில் திமுக மகத்தான வெற்றியை பதிவு செய்த நிலையில், சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் இன்று கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நவீன வசதிகளுடன் கூடிய சர்வதேச அளவிலான கிரிக்கெட் மைதானம் அமைக்க இடம் தேர்வு செய்வது தொடர்பாக ஒண்டிபுதூர் பகுதியில் உள்ள திறந்தவெளி சிறை மைதானத்தில் ஆய்வு நடத்தினார்.
+ There are no comments
Add yours