கும்பகோணம் அரசு பேருந்தில் தவறவிட்ட 5 சவரன் தங்க சங்கிலியை மீட்டு ஒப்படைத்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர் !

Spread the love

கும்பகோணம்: பேருந்தில் தவறவிட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான 5 பவுன் தாலி செயினை அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்- நடத்துநர் கண்டெடுத்து கும்பகோணம் போலீஸார் முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைத்தனர்.

பாபநாசம் வட்டம், கணபதியக்ரஹாரம், மணலூர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தபால் துறை ஊழியர் சரவணன். அவருடைய மனைவி ராஜலட்சுமி (40) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகா ஆகிய 2 பேரும் நேற்று எடப்பாடியில் இருந்து கும்பகோணம் செல்லும் அரசு போக்குவரத்து கழகப் பேருந்தில் தனது கிராமத்திற்கு புறப்பட்டனர்.

பேருந்தின் ஓட்டுநராக எடப்பாடியை சேர்ந்த முருகேசனும், நடத்துனராக அதே ஊரைச் சேர்ந்த சண்முகமும் பணியில் இருந்தனர். அந்தப் பேருந்து, அய்யம்பேட்டைக்கு வந்ததும், அவர்கள் 2 பேரும் அதிலிருந்து இறங்கி தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக மினி பேருந்தில் ஏறி சென்றனர்.

அப்போது, ராஜலட்சுமி தான் கழுத்தில் அணிந்திருந்த தாலிச் செயின் காணாமல் போனது அவருக்கு தெரிய வந்தது. இது தொடர்பாக ராஜலட்சுமி அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்து, அரசு பேருந்தில் வந்திறங்கிய விவரங்களை போலீஸாரிடம் தெரிவித்தார்.

பின்னர், போலீஸார் கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீஸாருக்கு இந்த தகவலை தெரிவித்தனர்.இதைத் தொடர்ந்து, மேற்கு போலீஸார் அந்தப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு தகவலை தெரிவித்ததை அடுத்து அவர்கள், அந்தப் பேருந்து முழுவதும் தேடிப் பார்த்தனர்.

அப்போது, பேருந்தின் ஒரு இருக்கையின் கீழ் ராஜலட்சுமியின் தாலி செயின் இருப்பது கண்டறியப்பட்டதும், கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்திற்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.பின்னர், ராஜலட்சுமிக்கு அய்யம்பேட்டை போலீஸார் மூலம் தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்துக்கு நேற்று இரவு வந்த ராஜலட்சுமி மற்றும் அவரது கணவர் சரவணனிடம், போலீஸார் முன்னிலையில் ஓட்டுநர்- நடத்துநர்கள், கண்டெடுக்கப்பட்ட தாலி செயினை ஒப்படைத்தனர். அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்- நடத்துனர்களின் நேர்மையை, மேற்கு காவல் ஆய்வாளர் ஜெகதீசன் மற்றும் போலீஸார் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours