தமிழகம் முழுவதும் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. வேட்புமனு தாக்கல் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. வரும் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில் இன்று பங்குனி உத்திரம் நல்லநாள் என்பதால் தமிழகம், புதுச்சேரியில் அதிமுக வேட்பாளர்கள் 33 பேரும் இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்கின்றனர். திமுகவில் விரும்பிய நாட்களில் வேட்புமனுக்களை தாக்கல் செய்யுமாறு கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ள நிலையில், சென்னையில் திமுக வேட்பாளர்கள் கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோரும் தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள சில வேட்பாளர்களும் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.
இதேபோல் பாஜகவில் சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன், வினோஜ் செல்வம், பால் கனகராஜ், நாமக்கலில் கே.பி.ராமலிங்கம், திருப்பூரில் ஏ.பி.முருகானந்தம் உள்ளிட்டோர் இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்கின்றனர்.
நாம் தமிழர் கட்சி சார்பிலும் இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்கின்றனர். பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் தென்காசியிலும், பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியிலும் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.
இன்று அதிக அளவில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதால், சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் அசம்பாவிதங்களை தடுக்கவும், கட்சியினரையும், போக்குவரத்தையும் ஒழுங்குபடுத்தவும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours