தூத்துக்குடி வஉசி துறைமுக வளாகத்துக்கு ஹெலிகாப்டரில் இன்று காலை 9.30 மணிக்கு வரும் பிரதமர் மோடி, 9.45 மணி முதல் 10.30 மணி வரை நடைபெறும் அரசு விழாவில், சுமார் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கிவைக்கிறார்.
ரூ.7,055 கோடி மதிப்பிலான வெளித்துறைமுக விரிவாக்கம், ரூ.265.15 கோடி மதிப்பில் வடக்கு சரக்கு தளம்-3 இயந்திர மயமாக்கல், ரூ.124.32 கோடி மதிப்பில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் மையம் உள்ளிட்ட பணிகளை தொடங்கிவைக்கும் பிரதமர், குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கும் அடிக்கல் நாட்டிவைக்கிறார். மேலும், ரூ.1,477 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ள வாஞ்சி மணியாச்சி – நாகர்கோவில் இரட்டை ரயில் பாதை, நாடு முழுவதும் 75 கலங்கரை விளக்கங்கள், ரூ.4,586 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
தூத்துக்குடி அரசு விழாவில்பங்கேற்ற பின்னர், பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார். காலை 11 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டரில் செல்லும் பிரதமர் 11.15 மணிமுதல் 12.30 மணி வரை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பின்னர் பகல் 12.45 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்லும் பிரதமர், அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
+ There are no comments
Add yours