சென்னை: ‘முரசொலி’ நாளிதழின் நிர்வாக ஆசிரியரும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மருமகனுமான செல்வம் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (அக்.10) காலமானார். அவருக்கு வயது 84.
மறைந்த முதல்வர் கருணாநிதியின் மருமகனான முரசொலி செல்வம், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி நாளிதழை கவனித்து வந்தார். சிலந்தி என்ற புனைப் பெயரில் , முரசொலி நாளிதழில் பல கட்டுரைகளை எழுதி வந்தார். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், இன்று (அக்.10) காலை ‘முரசொலி’ செல்வம் காலமானார்.
மறைந்த முரசொலி செல்வத்தின் உடல், சென்னை கோபாலபுரத்தில் உள்ள மறைந்த முதல்வர் கருணாநிதியின் இல்லத்துக்கு கொண்டு வரப்படவுள்ளது. இதையடுத்து கோபாலபுரம் இல்லத்துக்கு துணை முதல்வர் உதயநிதி, திமுக எம்பி தயாநிதி மாறன் ஆகியோர் வந்தனர். ஏராளமான திமுக தொண்டர்களும் அப்பகுதிக்கு வந்துள்ளனர். முரசொலி செல்வத்தின் மறைவுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்கள், அரசியல் கட்சியினர், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
+ There are no comments
Add yours