பாக்ஸிங் சண்டையில் யார் நாக்அவுட் ஆகி கீழே விழுகிறார்களோ, அவர்கள் தோல்வியை ஒத்துக்கொள்ள வேண்டும் என வீரலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார்.
கடந்த 2012-ம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிவிட்டார் என்று கூறி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரை பெற்றுக் கொண்ட வளசரவாக்கம் போலீசார் கற்பழிப்பு உள்பட 5 பிரிவின் கீழ் சீமான் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர். அந்த வழக்கு இத்தனை ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில், விஜயலட்சுமி திடீரென்று சீமானை எதிர்க்க முடியவில்லை என்று கூறி தனது புகாரை வாபஸ் பெற்றுவிட்டார்.
இந்த விவகாரத்தில், நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி குரல் கொடுத்து வந்த நிலையில், சீமானுக்கும் வீரலட்சுமிக்கும் இடையே மோதல் வெடித்தது.
வீரலட்சுமிக்கு எதிராக சீமான் பல முறை கருத்துகளை முன்வைத்து வந்தார். இந்நிலையில், இருதரப்பினருக்கும் இடையே மோதல் தீவிரமடைந்ததால், வீரலட்சுமியின் கணவர் கணேசன், சீமானை தொடர்பு கொண்டு தன்னுடன் பாக்ஸிங்கிற்கு வரும்படி அழைப்பு விடுத்த ஆடியோ சமூக வலைதளதங்களில் பரவியது.
அதற்கு பதிலளித்த சீமான், பாக்ஸிங்கிற்கு தான் தயார் என்றும், இடம் மற்றும் நேரத்தை அறிவித்தால் உடனே வருவதாகவும், தன் கையால் தான் அவர் சாக வேண்டும் என்றால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் சீமானின் சவாலை ஏற்ற வீரலட்சுமி, சண்டைக்கு நாள் குறித்து, இடத்தையும் அறிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், வீரலட்சுமி பேசும் அந்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வீரலட்சுமி பேசியிருப்பதாவது..
“நான் இப்போது திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர் வட்டம் தொட்டிக்கலை பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிரவுண்டில் நின்று கொண்டிருக்கிறேன். இந்த இடத்தைத்தான், என் கணவர் கணேசனுடன் நீங்கள் (சீமான்) சண்டை போட வேண்டிய இடமாக தீர்மானித்துள்ளோம்.
வரும் 2024ம் ஆண்டு தை மாதம் காணும் பொங்கல் அன்று எனது கணவருக்கும், உங்களுக்கும் இங்குதான் சண்டை நடக்க போகிறது. இந்த சண்டையில் பாக்ஸிங், கராத்தே, குங்பூ, மல்யுத்தம் ஆகிய எந்த சண்டை வேண்டுமென்றாலும் நீங்கள் போடலாம்.
எதுவாக இருந்தாலும் அனைத்தையும் சமாளிக்க எனது கணவர் தயாராக இருக்கிறார். இந்த சண்டையில் யார் நாக்அவுட் ஆகி முதலில் கீழே விழுகிறார்களோ, அவர்கள் தோல்வியை ஒத்துக்கொள்ள வேண்டும். என்ன பந்தயம் என்பது குறித்து போட்டி நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு அறிவிக்கிறேன்” என்று பேசியுள்ளார்.
+ There are no comments
Add yours