தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் கூடி வரும் நிலையில், முன்பதிவு இல்லா பேருந்துகள் குறைவாக இருப்பதாக பயணிகள் குற்றம் சாட்டினர்.
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு லட்சக்கணக்கான பொதுமக்கள் பயணம் செய்கின்றனர். தீபாவளியை முன்னிட்டு இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை இருப்பதால், அதிகப்படியான பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்து, ரயில் நிலையங்களில் கூடி வருகின்றனர்.
கூட்ட நெரிசலை தவிர்க்க, கோயம்பேடு, மாதவரம், தாம்பரம் மெப்ஸ், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி பைபாஸ் மாநகராட்சி பேருந்து நிறுத்தம், கே.கே.நகர் மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து வெளியூர் பேருந்துகள் பிரித்து இயக்கப்படுகின்றன. இத்துடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலும் வெளியூர் பேருந்துகள் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளில் நேற்று வழக்கமாக இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன், 1822 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. இதில் நேற்றும், நேற்று முன்தினமும் சேர்த்து மொத்தம் 6,656 பேருந்துகளில் 3,66,080 பயணிகள் பயணித்துள்ளனர் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
மேலும் இதுவரை 2,38,598 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். இன்று சொந்த ஊர் செல்பவர்களுக்காக வழக்கமாக இயக்கப்படும் 2100 பேருந்துகள் மட்டுமின்றி 1415 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகிறது. நேற்று இரவு வரை பொதுமக்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காத்திருந்து தங்கள் ஊர்களுக்கு செல்ல பேருந்து இல்லாமல் ஒரு சிலர் வீடு திரும்பி சென்றதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து முன்பதிவு செய்யாமல் சொந்த ஊருக்கு புறப்பட்டு காத்திருக்கும் பயணிக்ள், அதிகப்படியான பேருந்துகள் முன்பதிவு செய்ததன் காரணமாக, முன்பதிவு இல்லாமல் வரக்கூடிய பயணிகள் பேருந்துகள் அதிகம் இல்லை என்றும், காலை 6 மணியில் இருந்து பேருந்துக்காக காத்துக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் போக்குவரத்து துறை ஊழியர்கள் தெரிவிக்கும்போது, தொடர்ச்சியாக பேருந்துகள் அனைத்து ஊர்களுக்கும், முன்பதிவு இல்லா பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தனர்.
+ There are no comments
Add yours