தமிழகத்தில் அமைதியாக நடந்த வாக்குப்பதிவு !

Spread the love

இந்தியாவின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடந்தது. தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் அமைதியான முறையில் நடந்த மக்களவைத் தேர்தலில், இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவாகின.

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும், பெரிய அளவிலான அசாம்பவித சம்பவங்களின்றி வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு சில இடங்களில் தாமதாக தொடங்கப்பட்டது; சில இடங்களில் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது போன்ற சில சலசலப்புகள் மட்டுமே ஏற்பட்டது. ஒட்டுமொத்தமாக, தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்துள்ளது. வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணிகளில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

“கடந்த 2019 தேர்தலில் 7 மணி நிலவரப்படி கிட்டத்தட்ட 69 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. அத்துடன் இதை ஒப்பிடுகையில் இந்த வாக்கு சராசரி நன்றாகவே இருக்கிறது. பல இடங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த காரணத்தால், பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையிலான நேரத்தில் அதிகமானோர் வாக்களிக்க வந்துள்ளனர். 6 மணிக்குள் வந்த பலரும் ஆர்வத்துடன் டோக்கன் பெற்றுக்கொண்டு வாக்களிக்க காத்திருந்தனர். சனிக்கிழமை பகல் 12 மணிக்கு துல்லியமான வாக்குப்பதிவு சதவீதம் வெளியாகும்” என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

மேலும், “தேர்தல் ஆணையத்தில் இருந்து ஓர் அறிவுறுத்தல் வந்துள்ளது. அடுத்த கட்டமாக கேரளா, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் மட்டுமே பாதுகாப்பு படையினர் சோதனை தொடரும். மற்ற இடங்களில் பாதுகாப்பு படையினரை திரும்ப பெற உள்ளோம்” என்று தெரிவித்தார். | விரிவாக வாசிக்க > தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு: சத்யபிரத சாஹு தகவல்

எந்தெந்த தொகுதிகளில் அதிக வாக்குப்பதிவு?: தமிழகத்தைப் பொறுத்தவரையில், இரவு 7 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் 75.64 சதவீத வாக்குகளும், தருமபுரியில் 75.44 சதவீத வாக்குகளும் குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35 சதவீத வாக்குகளும், தென் சென்னையில் 67.82 சதவீத வாக்குகளும் பதிவாகின. 33 மக்களவைத் தொகுதிகளில் 70 சதவீத வாக்குப்பதிவை கடந்தது கவனிக்கத்தக்கது. தொகுதி வாரியான வாக்குப்பதிவு – இரவு 7 மணி நிலவரம்:

கள்ளக்குறிச்சி - 75.67%
தருமபுரி - 75.44%
சிதம்பரம் - 74.87%
பெரம்பலூர் - 74.46%
நாமக்கல் - 74.29%
கரூர்- 74.05%
அரக்கோணம் - 73.92%
ஆரணி - 73.77%
சேலம்- 73.55%
விழுப்புரம்- 73.49%
திருவண்ணாமலை - 73.35%
வேலூர் - 73.04%
காஞ்சிபுரம் - 72.99%
கிருஷ்ணகிரி - 72.96%
கடலூர் - 72.40%
விருதுநகர் -72.29%
பொள்ளாச்சி -72.22%
நாகப்பட்டினம் - 72.21%
திருப்பூர் - 72.02%
திருவள்ளூர் - 71.87%
தேனி - 71.74%
மயிலாடுதுறை - 71.45%
ஈரோடு - 71.42%
திண்டுக்கல் - 71.37%
திருச்சி -71.20%
கோவை - 71.17%
நீலகிரி - 71.07%
தென்காசி - 71.06%
சிவகங்கை -71.05%
ராமநாதபுரம் -71.05%
தூத்துக்குடி - 70.93%
திருநெல்வேலி - 70.46%
கன்னியாகுமரி - 70.15%
தஞ்சாவூர்- 69.82%
ஸ்ரீபெரும்புதூர் - 69.79%
வட சென்னை - 69.26%
மதுரை - 68.98%
தென் சென்னை -67.82%
மத்திய சென்னை - 67.35%

நாடு முழுவதும் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு: முதல்கட்ட மக்களவைத் தேர்தலையொட்டி, நாடு முழுவதும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் 39, ராஜஸ்தானில் 12, உத்தரப் பிரதேசத்தில் 8 மத்தியப் பிரதேசத்தில் 6, உத்தராகண்ட்டில் 5 தொகுதிகள் உள்ளிட்ட இந்த 102 தொகுதிகளில் ஏறத்தாழ 60.03 சதவீத வாக்குகள் பதிவாகின.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours