தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசுகையில், சனாதன ஒழிப்பு பற்றி பேசி இருந்தார். அதில், டெங்கு, கொரோனா போல சனாதானமும் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று என்று பேசி இருந்தார். இது பாஜக மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவரது பேச்சுக்கு கடும் கண்டனங்களும், காவல்துறையில் புகார்களும் அளிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இது குறித்து அண்மையில் நெய்வேலி நடைபெற்ற ஒரு திருமண விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பேசினார்.
அவர் பேசுகையில், அண்மையில் ஒரு மாநாட்டில் நான் கலந்து கொண்டேன். அந்த மாநாட்டின் பெயரே சனாதன ஒழிப்பு மாநாடு தான். அதில் நான் சனாதனம் பற்றி பேசினேன். நான் பேசியது ஒரு நாள் தான். அதை அப்படியே விட்டு இருந்தால் ஒருநாள் செய்தியாக மாறி போயிருக்கும்.
ஆனால், பாஜக அதனை அப்படி விடாமல், திரும்பத் திரும்ப நான் பேசியதை திரித்து பேசி அதனை மத்திய அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடி உட்பட அனைவரும் பேசும் படியாக மாற்றிவிட்டனர். மேலும், எனது தலைக்கு 10 கோடி ரூபாய் அளிக்கப்படும் என ஒரு சாமியார் விலை பேசும் அளவிற்கு இந்த விவகாரம் சென்று விட்டது. சாமியாருக்கு எப்படி அவ்வளவு பணம் வந்தது என்று தெரியவில்லை. அவரிடம் 500 கோடி ரூபாய் சொத்து இருக்கிறதாக அவரே கூறுகிறார்.
பிரதமர் மோடி சொன்னபடி இந்தியாவை மாற்றிவிட்டார். அவர் 9 ஆண்டுகளில் என்ன செய்தார் என்று நங்கள் கேட்கையில், அவர் இந்தியாவை மாற்றி காட்டுவேன் என்று கூறியிருந்தார். அவர் கூறியது போலவே தற்போது இந்தியாவின் பெயரை மாற்றிவிட்டார். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என கூட்டணிக்கு பெயர் வைத்த காரணத்தாலே இந்தியாவின் பெயரையே மாற்றும் ஒரு கேலிக்கூத்தான செயலை மத்திய அரசு செய்து கொண்டிருக்கிறது.
சனாதானத்தை பற்றி நான் புதிதாக பேசவில்லை. நான் பல மேடைகளில் பேசி உள்ளேன். 200 ஆண்டுகளாக நாங்கள் பேசி வருகிறோம். திமுக தொடங்கப்பட்டதே சனாதனத்தை ஒழிக்கத்தான் என்று அமைச்சர் உதயநிதி அந்த விழாவில் பேசினார்.
+ There are no comments
Add yours