“அயோத்தி சென்ற ராகுல் ராமர் கோயிலுக்கு செல்லாதது அவர் இந்துக்களை வெறுக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுகிறது” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “சனிக்கிழமையன்று உதகையில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’ வளாகத்தில் ‘சிசிடிவி’ கேமராக்கள் 20 நிமிடங்கள் செயல்படவில்லை. காலநிலை காரணமாக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சேலம், நாமக்கல் மாவட்டங்களை ஒப்பிடும் போது உதகையில் வெயிலின் தாக்கம் குறைவுதான். எனவே இதுபோன்ற காரணங்களைக் கூறுவதை விடுத்து 24 மணி நேரமும் எவ்வித இடையறும் ஏற்படாமல் சிசிடிவி கேமராக்கள் செயல்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். | விரிவாக வாசிக்க > வாக்கு எண்ணிக்கை மைய கண்காணிப்பு கேமரா செயல் இழப்பு ஏன்? – நீலகிரி ஆட்சியர் விளக்கம்
நீலகிரி, கோவை, தென்சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. தோல்வியை மறைப்பதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளை திமுக மேற்கொண்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது என தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில், ‘இண்டியா’ கூட்டணியினர் தோல்வி பயம் காரணமாக வாக்குப்பதிவு இயந்திரம் செயல்பாட்டில் சந்தேகம் இருப்பதாகப் பேசி வருகின்றனர்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பது 500 ஆண்டு கால போராட்டம். கோயில் கட்டப்பட்டதால் இந்தியர்கள் ஒவ்வொருவரின் கனவும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அக்கோயிலுக்கு ராகுல் காந்தி வழிபாடு நடத்தச் செல்லாதது என்பது ராமரையும், இந்துக்களையும் அவர் வெறுக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுகிறது.” என்று அவர் கூறினார்.
+ There are no comments
Add yours