திருப்பூர்: திருப்பூரில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகரில் நேற்று மிக கனமழை பெய்தது. சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டித் தீர்த்தது. நேற்று மட்டுமே அதிகபட்ச அளவாக 9.2 செ.மீ மழை அளவு பதிவானது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. குறிப்பாக, திருப்பூர் அங்கேரிபாளையம் அடுத்துள்ள மகாலட்சுமி நகர், கவிதா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீருடன், கழிவு நீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது.
இதனால் இரவு முழுவதும் மக்கள் தூங்க முடியாமல் கடும் அவதி அடைந்தனர். மேலும், ஒவ்வொரு முறை மழை பொழிவின்போதும் வீடுகளில் மழை நீர் புகுவதால் கடும் அவதி ஏற்படுவதாகவும் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனச் சொல்லியும் அப்பகுதி மக்கள் திருப்பூர் – அங்கேரி பாளையம் சாலையில் இன்று காலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து விரைந்து வந்த அனுப்பர்பாளையம் போலீசார், மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியல் போராட்டத்தை கைவிடச் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் கழிவு நீர் வெளியேறி வீடுகளுக்குள் புகாத வண்ணம் சாக்கடை கால்வாய் உயர்த்தி கட்டப்படும் என உத்தரவாதம் அளித்தனர். எனினும், இது நிரந்தர தீர்வு இல்லை எனவும் தங்களுக்கு முழுமையான வடிகால் வசதி அமைத்து தர வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
+ There are no comments
Add yours