கள்ளச்சாராய சாவுகள் அரசின் நிர்வாக திறமையின்மையை காட்டுகிறது.. சீமான் சாடல் !

Spread the love

கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கவே நல்ல சாராயம் விற்பதாகக் காரணம் கூறிய திமுக அரசு, தற்போது கள்ளச்சாராய விற்பனையையும் தடுக்கத்தவறி 5 உயிர்களைப் பலிகொண்டுள்ளது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையும், சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டையும் காட்டுகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 5 பேர் உயிரிழந்ததுடன், 10க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்றுவரும் செய்தி பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். கஞ்சா, குட்கா, அரசு விற்கும் மதுவினைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனையும் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.

கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கவே நல்ல சாராயம் விற்பதாகக் காரணம் கூறிய திமுக அரசு, தற்போது கள்ளச்சாராய விற்பனையையும் தடுக்கத்தவறி 5 உயிர்களைப் பலிகொண்டுள்ளது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையும், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்குச் சீர்கெட்டுள்ளது என்பதையுமே காட்டுகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு மே மாதம் விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் உயிரிழந்ததுடன், 20க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தானநிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கொடுந்துயரம் நிகழ்ந்தது. விழுப்புரத்தில் திமுக நிர்வாகியே கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டதும், அவருக்கும் சேர்த்து திமுக அரசு நிவாரணத்தொகை அறிவித்த கொடுமைகளும் நடைபெற்றது.

அதன் பிறகாவது திமுக அரசு விழிப்புற்று கடும் நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது மீண்டும் 5 உயிர்கள் பலியான துயரங்கள் நிகழ்ந்திருக்காது. அரசு விற்றால் நல்ல சாராயம்? தனியார் விற்றால் கள்ளச்சாராயமா? கள்ளச்சாராயத்தால் கண்ணுக்குமுன் அடுத்தடுத்து உயிர்கள் பலியாகும்போது மட்டும், மக்களின் மனக்கொந்தளிப்பிற்கு அஞ்சி உடனடி தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கும் திமுக அரசு, மெல்ல மெல்ல பல இலட்சக்கணக்கான உயிர்களைப் பலிகொண்டுவரும் மலிவு விலை மதுக்கடைகளைத் தொடர்ந்து நடத்துவது ஏன்? ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம் என்ற திமுகவின் கடந்தகால வாக்குறுதி என்னானது? சாராய ஆலைகளை நடத்தும் திமுகவினர் தங்கள் ஆலைகளை இதுவரை மூடாதது ஏன்? கஞ்சா, குட்கா, கள்ளச்சாராயம் போன்றவை போதைப்பொருட்கள் என்றால் அரசு விற்கும் மதுபானம் புனிதத் தீர்த்தமா? போதைப்பொருள் விற்பனையைத் தடுக்கத் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த முதலமைச்சர், அரசு நடத்தும் மதுக்கடைகளை இதுவரை மூடாதது ஏன்?

திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த 3 ஆண்டுகளில் கஞ்சா, கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனையைத் தடுக்கத் தவறியதும், வீரன் மதுபானம், கோதுமை பீர் வகை என்று டாஸ்மாக் மதுவிற்பனையை அதிகப்படுத்தியதுமே முதன்மையான சாதனையாகும். மகளிருக்கு உதவித்தொகை தருவதாகப் பெருமை பேசும் திமுக அரசு, டாஸ்மாக் மது மற்றும் கள்ளச்சாராயத்தால் தந்தையையும், கணவரையும், பிள்ளைகளையும், உடன் பிறந்தாரையும் இழந்து தவிக்கும் பெண்களுக்கு என்ன பதில் கூறப்போகிறது?

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட அனைத்து சமூகக் குற்றங்களுக்கும் அடிப்படையாகவுள்ள போதைப்பொருட்கள் விற்பனையைத் தடுப்பதில் திமுக அரசு தொடர்ந்து அலட்சியமாகச் செயல்படுவது ஏன்? கோடிக்கணக்கான மக்களின் நல்வாழ்வினைவிட, திமுக அரசிற்கு மதுவிற்பனையால் வரும் பல்லாயிரம் கோடி வருமானமும், அதன் மூலம் நடைபெறும் ஆட்சி அதிகாரமும்தான் முக்கியமானதா? என்ற கேள்விகளுக்கு என்ன பதில் கூறப்போகிறது.

ஆகவே, கள்ளச்சாராய விற்பனையை முற்று முழுதாக தடுக்கக் கடும் நடவடிக்கை எடுப்பதோடு, தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த அரசு நடத்தும் அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக இழுத்து மூட வேண்டுமென்று தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்’ என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours