சென்னை: காவல்துறையின் விசாரணை நேர்மையாகவும், நியாயமானதாகவும் நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இன்று அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள தனது பதிவில், ‘பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள விசாரணைக் கைதி திருவேங்கடம் என்பவர், சென்னை மாதவரம் அருகே தப்பியோட முயன்ற போது காவல்துறையினரால் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் குற்றவாளிகள் அல்ல எனவும், உண்மையான குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என அவரது குடும்பத்தினர் உட்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திய நிலையில், தமிழக காவல்துறை அரங்கேற்றியிருக்கும் என்கவுன்ட்டர் சம்பவம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
கொலை நடந்த அன்றே தாமாக முன்வந்து காவல்துறையினரிடம் சரணடைந்த விசாரணைக் கைதி திருவேங்கடம், தப்பியோட முயன்றதன் காரணமாகவே சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக காவல்துறை விளக்கம் அளித்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி முன்பின் முரணாக அமைந்துள்ளது.
எனவே, விசாரணைக் கைதி திருவேங்கடம் சுட்டுக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்வதோடு, ஆம்ஸ்ட்ராங்கின் கொலை வழக்கு நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.’ இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours