மதுரை; ‘‘அரசு ஊழியர்கள், பொதுமக்களின் போராட்டக்களமாக தமிழகம் மாறியுள்ளது,’’ என்று சட்டமன்ற எதிர்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார்.
மதுரையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் திரும்பிய திசை எங்கும் திமுக அரசின் மீது மக்கள் கடும் கோபம் கொண்டுள்ளனர். மக்கள், அரசு ஊழியர்கள், அங்கன் வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், மக்கள் நல்வாழ்வு பணியாளர்கள், வருவாய்த்துறை பணியாளர்கள் என அனைவரும் தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதனால், தமிழகம் இன்றைக்கு போராட்ட களமாக மாறி உள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழையில் மக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை, முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்திருக்கிறதா என்றால் இல்லை.
ஏனென்றால் வருவாய் துறை அமைச்சர் ஒரு பேட்டி கொடுக்கிறார். அதில், பயிர்கள் சேதம் அடையவில்லை, இதுவரை விவரம் எங்களுக்கு வரவில்லை என்று உண்மைக்கு மாறாக கூறுகிறார். அதே நேரத்தில் நாகை, திருவாரூர் போன்ற மாவட்டங்களில் மிகப்பெரிய பயிர் சேதம் அடைந்துள்ளதாக ஊடங்களில் செய்தி வெளிவந்துள்ளது. இந்த விவரங்கள் கூட சேகரிக்காமல் மக்களுக்கு தவறான தகவலை அமைச்சர் வெளியிடுவது என்பது இந்த அரசு சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக உள்ளது.
வருவாய் துறைகளில் உள்ள 38 மாவட்டங்களிலே, 87 கோட்டங்களிலே, 317 வட்டங்களிலே 17,680வருவாய் கிராமங்களிலே இன்றைக்கு பணிகள் தேங்கி போய் உள்ளது, காரணம் என்னவென்றால் வருவாய் துறையில் தொடர்ந்து பணியிடங்கள் பறிபோகும் அவலம் உள்ளது. ஆகவே பணியிடங்களை பாதுகாத்திட கோரிக்கை முன்வைத்து மூன்றாம் கட்டமாக போராட்டத்தை வருவாய்த்துறையினர் நடத்தி இருக்கிறார்கள்.
ஆகவே இந்த போராட்டக் களத்திற்கு தீர்வு காண்பதற்கு முதலமைச்சருக்கு நேரமில்லை. ஆனால் எதிர்க்கட்சிகள், தலைவர்கள் அறிக்கை கொடுத்தால் அதை விமர்சனம் செய்வதற்கு மட்டும் தான் அவருக்கு நேரம் உள்ளது. இதற்கு தீர்வு காண அவருக்கு அக்கறை இல்லை, ஆர்வமில்லை. அதற்கான கருணையை அவரிம் தமிழக மக்கள் எதிர்பார்க்க முடியாது.
அவர் சொன்னதை எதையும் நிறைவேற்றவில்லை,1000 ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு புறவாசல் வழியாக 10,000 ரூபாய் அளவில் விலைவாசியை உயர்த்திவிட்டனர். இதனால் மக்கள் விழி பிதுங்கி உள்ளனர். மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு இதனால் மக்கள் ஆங்காங்கே போராட்டி போரட்ட களத்தில் உள்ளனர். மயிலாடுதுறை நாகப்பட்டினம் போன்ற கனமழையால் நிர்வாகம் ஸதம்பித்து உள்ளது. ஏதும் நடைபெறாதது போல, விளம்பர வெளிச்சத்தில் முதல்வர் ஆட்சி நடத்தி வருகிறார்.
இன்று பெண்களுக்கு பாதுகாப்பில்லை, அதேபோன்று அரசு காலியான பணியிடங்களில் நிரப்ப வேண்டும் போன்றவற்றை எல்லாம் எதிர்கட்சித்தலைவர் கே.பழனிசாமி சுட்டிக்காட்டி வருகிறார். அதிமுக ஆட்சி காலத்தில் காலி பணியிடங்கள் ஏற்படும் போது உடனடியாக கள ஆய்வு செய்து பூர்த்தி செய்தார்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல 20 ஆயிரம் ஆசிரியர்கள் காலி பணியிடங்களை நியமனம் செய்து ஒரே அரசு விழாவில் வழங்கி வரலாற்று சாதனை படைத்தார்.
ஆகவே, இதையெல்லாம் முன்மாதிரியாக முதலமைச்சர் எடுத்துக் கொண்டு செயல்படுவரா? என்று பார்த்தால் ஏமாற்றம் தான் பரிசாக கிடைக்கிறது. ஆகவே தொடர்ந்து மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், படித்தவர்களுக்கு எல்லோருக்கும் ஏமாற்றத்தை பரிசாக தருகிற முதலமைச்சருக்கு மிக விரைவிலே எதிர்க்கட்சித் தலைவர் என்ற பரிசை தர மக்கள் தயாராகி விட்டார்கள்.
மக்களை காப்பதிலே வருவாய்துறை முக்கிய பங்காற்றி வருகிறது. அன்றாட பணிகளுக்கு வருவாய்த்துறை முக்கிய பங்காற்றி வருகிறது. மக்களுக்கு சேவை செய்கின்ற வருவாய்த்துறை என்ற தாய் துறைக்கு, தாய் அன்போடு கவனம் செலுத்த முன் வருவாரா முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
+ There are no comments
Add yours