கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும்.. தமிழக அரசுக்கு நல்லசாமி வேண்டுகோள் !

Spread the love

திருப்பூர்: “நடப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரில், 34 ஆண்டு கால கள்ளுக்கான தடையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அகற்ற வேண்டும்” என்று கள் இயக்கம் நல்லசாமி வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி இன்று (ஜூன் 22) விடுத்துள்ள அறிக்கையில், “தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போன்றவர்களுக்கே ‘கள்’ பற்றிய புரிதல் இல்லை. எதற்காக தமிழக அரசிடம் கள்ளுக்கு அனுமதி கேட்க வேண்டும்? ‘கள்’ ஒரு உணவு. போதைப்பொருள் அல்ல. ‘கள்’ இறக்குவதும், பருகுவதும் இந்திய அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமையாகும்.

புதுச்சேரி, கேரளா, தெலங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் கள்ளுக்கு தடை இல்லை. தமிழகத்தில் மட்டும் 34 ஆண்டுகளுக்கு மேலாக ‘கள்’ தடை தொடர்ந்து நீடித்து வருகிறது. கள்ளில் கலப்படம் செய்வார்கள் என்று சொல்லி, தமிழகம் மட்டும் தடை செய்துள்ளது. தமிழக அரசுக்கு கலப்படத்தை கட்டுப்படுத்த ஆளுமை இல்லையா?

பிஹாரில் மதுவிலக்கு கொண்டுவரப்பட்டதால் தான், குற்றங்களும், விபத்துகளும் குறைந்திருக்கின்றன என குற்ற ஆவணப்பதிவு கூறுகின்றது. தமிழகத்தில் மட்டும் அரசே முன்னின்று தரக்குறைவான மதுவை மக்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூலம் வழங்கி வருகிறது. இதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டே, இங்கு நலத்திட்டங்கள் தருவதாக கூறுவது தலைக்குனிவே.

கள்ளச்சாராய உயிரிழப்புக்கு பின் கள்ளுக்கு ஆதரவான போக்கு நிலவுவதை வரவேற்கிறோம். கள்ளக்குறிச்சியில் இன்றைக்கு 50-க்கும் மேற்பட்டோர் கள்ளச் சாராயம் குடித்து இறந்துள்ளனர். இவர்களின் குடும்பங்களுக்கு அரசு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கி உள்ளது. பிஹார் மாநிலத்தில் இதேபோல் கள்ளச் சாராய சாவுகளுக்கு இழப்பீடு தரப்படுவதில்லை. இவ்வாறான சாவுகளுக்கு இழப்பீடு கொடுப்பது, கள்ளச் சாராயத்தை ஊக்குவிக்கும் செயல். மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, அரசியலமைப்பு சட்டத்தை மதித்து, கள்ளுக்கான 34 ஆண்டு கால தடையை நீக்கி, நடப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அறிவிக்க வேண்டும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours