பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய கிராம மக்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார் .
இதுகுறித்து வேல்முருகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க ஒன்றிய- மாநில அரசுகள் திட்டமிட்டு, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், பரந்தூர் புதிய விமான நிலையம் அமையும் பட்சத்தில் முழுவதும் கையகப்படுத்தப்பட உள்ள ஏகனாபுரம் கிராம மக்கள் புதிய விமான நிலையத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 433 நாட்களாக இரவு நேரங்களிலும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சூழலில் புதிய விமான நிலையத் திட்டத்தில், நீர் நிலைகள் பாதிக்கப்படுவது குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையில் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு இரண்டாவது முறையாக பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள பகுதிகளில் ஆய்வு செய்ய வந்தனர். இவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏகனாபுரம் பகுதி பொதுமக்கள் மற்றும் விமான நிலைய எதிர்ப்புக் கூட்டமைப்பு குழுவினர், பரந்தூர் – கண்ணந்தங்கள் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் 130 மீது பேர் காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது; கண்டனத்துக்குரியது. அரசுகள் நிறைவேற்ற முற்படும் திட்டங்கள் அனைத்தும் மக்களின் பெயராலேயே நிறைவேற்றப்படுகின்றன, அத்திட்டத்தை நிராகரிக்கவும், அதை எதிர்த்துப் போராடவும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் மக்களுக்கு உரிமையை வழங்கியுள்ளது. ஆனால், பரந்தூர் விவகாரத்தில் அந்த உரிமைகளை தமிழ்நாடு அரசு மறுத்து வருவது வேதனை அளிக்கிறது.
பரந்தூர் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள மொத்தமுள்ள 4,563.56 ஏக்கரில் சுமார் 3,246 ஏக்கர் நிலம் விவசாயம் நடைபெறும் நன்செய் மற்றும் புன்செய் 799.59 நிலங்களாகும். நெல் விவசாயம் நடைபெறும் இந்நிலத்தை கையகப்படுத்துவதம் மூலம் நம்முடைய உணவு பாதுகாப்பு கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது. சூழலைக் காப்பது, உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்வது, நீர்நிலைகளை பாதுகாப்பதுதான் இன்றைய நிலையில் தலையாய கடமை என்பதை காலநிலை மாற்றம், அவ்வப்போது நமக்கு படிப்பினையை கற்றுக் கொடுத்து வருகிறது.
இந்த எதார்த்த நிலையை புரிந்துக்கொண்டு, அரசு பரந்தூரில் அமைக்கத் திட்டமிட்டுள்ள உள்ள, விமான நிலையத் திட்டத்தை கைவிட்டுவிட்டு மாற்றுவழிகளை முன்னெடுக்கவேண்டும். அதற்கு மாறாக, பல்லாண்டுகளாக வியர்வை சிந்தி நிலத்தைப் பண்படுத்தி விளைநிலமாக மாற்றி வைத்திருக்கும் கிராம மக்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அச்சுறுத்தி அடிய பணிய வைக்க அரசு முயலுவது ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே, பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடிய கிராம மக்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது என வேல்முருகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours