முன்னெப்போதும் இல்லாதவகையில் நீட் தேர்வு இந்த வருடம் சர்ச்சைக்கு ஆளானதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டன விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
மருத்துவ படிப்புகளுக்கு நடத்தப்படும் நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதாக மாணவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக தேர்வுக்கு முன்பே வினாத்தாள் வெளியானது, தேர்வு முடிவுகளில் ஒரே மையத்தில் தேர்வெழுதிய 6 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்றது, கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது ஆகியவை விவாதப்பொருளாகி உள்ளன. இதனை மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதித் தேர்வான நீட் தேர்வில் இந்த ஆண்டு 67 பேர் 720க்கு 720 என்ற முழு மதிப்பெண்ணைப் பெற்றனர். அதிக மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்ற விவகாரமும் சலசலப்பை ஏற்படுத்தியது. 2024ம் ஆண்டு நீட் இளநிலை நுழைவுத் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றது.
இதன் நிறைவாக கருணை மதிப்பெண்கள் பெற்ற 1,563 மாணவர்களுக்கு மட்டும் மறுத்தேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வுகள் முகமை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. அதன்படி அவர்களுக்கான தேர்வு ஜூன் 23 அன்று நடைபெற உள்ளது. இதனிடையே நீட் விவகாரத்தில் கருணை மதிப்பெண்கள் குளறுபடி தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.
”கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதன் மூலம் சமீபத்திய நீட் ஊழலில் இருந்து வெளியேற மத்திய அரசு முயற்சிக்கிறது. இது அவர்களின் சொந்த திறமையின்மையின் மற்றொரு ஒப்புதலாகும். மாநிலங்களின் உரிமையைப் பறித்த பிறகு, விதிமீறல்கள் மற்றும் தொழில்சார்ந்த முறையில் தேர்வுகளை நடத்துதல் போன்ற முக்கிய பிரச்சனைகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப அனுமதிக்கக் கூடாது. அவர்களின் திறமையின்மையையும், லட்சக்கணக்கான மாணவர்களின் வேதனையில் அக்கறையின்மையையும் கண்டிக்கிறோம். அதே வேளையில், எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான தேர்வு முறையைத் தீர்மானிப்பதில் மாநில அரசுகளின் பங்கை மீட்டெடுப்பதுதான் இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்” என்று தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours