திமுக கொடுத்த வாக்குறுதிகளை நம்பி ஏமாந்த மக்களுக்கு இனியும் துரோகம் செய்யக் கூடாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தை முற்றுகையிட்டு எம்ஆர்பி செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம் நடத்தினர்.
சற்று நேரத்தில் போராட்டம் தீவிரம் அடைந்ததால் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை குண்டுகட்டாக தூக்கி போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய செவிலியர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் அவரது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை கூறியதாவது :
பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, ஒவ்வொரு துறையிலும் வாக்களித்த மக்களை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. திமுக வாக்குறுதி எண் 356ல், ஒப்பந்த நியமன முறையில் பணியாற்றும் மருத்துவர்களும் செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று கூறி, ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கடந்தும், அதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல் துரோகம் செய்திருக்கிறது.
நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டம் நடத்திய செவிலியர்களை, காவல்துறையை ஏவி, சமூக விரோதிகளைப் போல அடாவடியாகக் கைது செய்திருக்கிறது திமுக அரசு.
ஏற்கனவே, வாக்குறுதி எண் 181ல், பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று கூறி ஏமாற்றி, அவர்களையும் கைது செய்திருந்தது. திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியதைத் தவிர, இவர்கள் செய்த தவறென்ன?
உடனடியாக, கைது செய்தவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டுமென்றும், திமுக கொடுத்த வாக்குறுதிகளை நம்பி ஏமாந்த மக்களுக்கு இனியும் துரோகம் செய்யக் கூடாது என்றும், தமிழ்நாடு பாஜக
சார்பாக வலியுறுத்துகிறேன் என தனது ட்விட்டர் பதிவில் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
+ There are no comments
Add yours