சென்னை: “நரேந்திர மோடி, தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்க உள்ளார். இது ஒரு மிகப்பெரிய சாதனை. அவருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். அதேநேரம், இந்த மக்களவைத் தேர்தலில், மக்கள் ஒரு வலுவான எதிர்க்கட்சியைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இது ஜனநாயகத்துக்கு ஓர் ஆரோக்கியமான அறிகுறி” என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (ஜூன் 9) நடைபெறும் விழாவில் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொள்கிறார். இதையடுத்து, டெல்லியில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக, நடிகர் ரஜினிகாந்த் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய நரேந்திர மோடி, தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்க உள்ளார். இது ஒரு மிகப்பெரிய சாதனை. அவருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். அதேநேரம், இந்த மக்களவைத் தேர்தலில், ஒரு வலுவான எதிர்க்கட்சியைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இது ஜனநாயகத்துக்கு ஓர் ஆரோக்யமான அறிகுறி” என்றார்.
பிரதமர் மோடியின் அடுத்த 5 ஆண்டு கால ஆட்சி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “நன்றாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்” என்றார்.
முன்னதாக, நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. கடந்த 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றது. எனினும், தனிப் பெரும்பான்மை (272) கிடைக்கவில்லை. அதேநேரம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) 293 இடங்களில் வென்று ஆட்சியை 3- வது முறையாக தக்கவைத்துக் கொண்டது.
இதையடுத்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் 9-ம் தேதி இரவு 7.15 மணிக்கு புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில், பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொள்ள உள்ளனர். இந்த தகவல் குடியரசுத் தலைவர் மாளிகையின் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளிப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours